Published : 15 Aug 2025 06:57 AM 
 Last Updated : 15 Aug 2025 06:57 AM
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்எல்ஏ. பூஜா பால். இவரது கணவர் ராஜு பால் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ. பிரயாக்ராஜ் மேற்கு தொகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் ரவுடி அதிக் அமதுவின் சகோதரர் அஸ்ரப் என்பவரை, ராஜு பால் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன் காரணமாக, ஏற்பட்ட விரோதத்தால் கடந்த 2005-ம் ஆண்டு ராஜு பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் என்பவரும் கடந்த 2023-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்பின் அதிக் அகமதுவின் மகன் ஆசாத், ஜான்சி அருகே நடைபெற்ற என்கவுன்ட்ரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த சில நாட்களில் அதிக் அகமது மற்றும் ஆஸ்ரப் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது 3 பேர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று சமாஜ்வாதி எம்எல்ஏ பூஜா பால் பேசும்போது, ‘‘என் கணவரை கொன்றது யார் என அனைவருக்கும் தெரியும். எனது கோரிக்கையை யாரும் கேட்கவில்லை. எனது கணவரை கொன்ற அதிக் அகமதுவை, முதல்வர் புதைத்து விட்டார். எனது கணவர் கொலைக்கு நீதி வழங்கிய முதல்வருக்கு நன்றி. பிரயாக்ராஜில் பல பெண்களுக்கு முதல்வர் நீதி வழங்கியுள்ளார். ஒட்டு மொத்த மாநிலமும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நம்பிக்கையுடன் பார்க்கிறது’’ என்றார்.
இதையடுத்து, பூஜாவை கட்சியிலிருந்து நீக்கி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். “பல முறை எச்சரிக்கை விடுத்தும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்” என அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT