Published : 15 Aug 2025 06:56 AM 
 Last Updated : 15 Aug 2025 06:56 AM
புதுடெல்லி: சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழந்தனர். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.
இதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14-ம் தேதி, பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்த தினம் இந்திய வரலாற்றில் மிகவும் துயரமான நாள் ஆகும். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் துன்பம், வேதனைகளை அனுபவித்தனர். கற்பனைக்கு எட்டாத வகையில் மிகப் பெரிய இழப்புகளை எதிர்கொண்டனர்.
எனினும் தாங்க முடியாத வலி, வேதனையை மக்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். வீழ்ச்சியில் இருந்து எழுச்சி பெற்ற மக்கள், வளர்ச்சிப் பாதையில் பல்வேறு மைல்கற்களை எட்டி புதிய சாதனைகளை படைத்தனர். இந்த நாள் நமக்கு ஒரு படிப்பினையை கற்றுத் தருகிறது. நாம் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும். இதன்மூலமே நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரிவினையின்போது ஏராளமானோர் உயிரிழந்தனர். அவர்களை இப்போது நினைவுகூர்கிறேன். பிரிவினைக்கும் அதன்பிறகு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம். வரலாற்றில் இந்த நாளை மறக்கவே முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
 
								
WRITE A COMMENT