Published : 14 Aug 2025 07:23 PM
Last Updated : 14 Aug 2025 07:23 PM
புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, வீரதீர செயல்கள் மற்றும் சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் உட்பட 1,090 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, காவல் துறை, தீயணைப்பு, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்த சேவைகளில் சிறப்பாக பணியாற்றிய 1,090 பேருக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீரதீர செயல்களுக்கான விருதுகள் 233 பேருக்கும், சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் 99 பேருக்கும், மகத்தான சேவையாற்றிய பிற துறைகளைச் சேர்ந்த 758 பேருக்கு சிறந்த சேவைக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளான கூடுதல் தலைமை இயக்குநர் பி.பால நாகதேவி, காவல் துறை தலைமை ஆய்வாளர்கள் ஜி.கார்த்திகேயன், எஸ்.லட்சுமி ஆகியோருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகத்தான சேவையாற்றிய 758 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 21 காவல் துறை அதிகாரிகள், ஒரு சிபிஐ அதிகாரி, 2 தீயணைப்புத் துறையினர், 2 ஊர்க்காவல் படையினர் மற்றும் சீர்திருத்தப் பணிகளுக்கான விருதுகள் 3 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT