Published : 13 Aug 2025 07:01 PM
Last Updated : 13 Aug 2025 07:01 PM
புதுடெல்லி: பாஜகவின் பிடியில் இருந்து அரசியலமைப்பு நிறுவனங்களை விடுவிக்க ஒன்றிணைவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தலில் வாக்கு திருட்டு நடப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை அக்கட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், மக்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருப்பது போன்றும், வரிசையில் நின்ற கணவனும் மனைவியும் வாக்களிக்கச் செல்லும்போது அவர்களை வழிமறிக்கும் இருவர், உங்கள் வாக்கு ஏற்கெனவே போடப்பட்டு விட்டது என்று கூறுவதாக உள்ளது. மேலும், அவ்வாறு கூறும் இருவருக்கும் தேர்தல் அதிகாரி உடந்தையாக இருப்பதுபோன்றும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மல்லிகார்ஜுன் கார்கே, "உங்கள் வாக்குரிமையைப் பறிக்க விடாதீர்கள், இந்த முறை கேள்விகளைக் கேளுங்கள், பதில்களைக் கோருங்கள்! வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள், பாஜகவின் பிடியிலிருந்து அரசியலமைப்பு நிறுவனங்களை விடுவிப்போம்!" என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதே வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "உங்கள் வாக்கு திருடப்படுகிறது... உங்கள் உரிமை திருடப்படுகிறது... இது உங்கள் அடையாள திருட்டுக்கு சமம்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி, "உங்கள் வாக்கு திருடப்படுவது என்பது உங்கள் உரிமைகளைத் திருடுவது, உங்கள் அடையாளத்தைத் திருடுவது போன்றது. உங்கள் வாக்களிக்கும் உரிமையைக் காப்பாற்றுங்கள், வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்" என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில், "வாக்குகள் திருடப்படுகின்றன. இது உங்கள் உரிமைகளை, உங்கள் அடையாளத்தைத் திருடுவதற்குச் சமம். எங்களுடன் சேருங்கள் - வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
वोट चोरी...
आपके अधिकार की चोरी है, पहचान की चोरी है।
हमारे साथ जुड़ें-
वोट चोरी के खिलाफ आवाज उठाएं #VoteChori pic.twitter.com/Bf0elDbYLk— Congress (@INCIndia) August 13, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT