Last Updated : 13 Aug, 2025 03:09 PM

5  

Published : 13 Aug 2025 03:09 PM
Last Updated : 13 Aug 2025 03:09 PM

“எனது படத்துடன் டி-ஷர்ட் அணியும் உரிமை அளித்தது யார்?” - பிரியங்காவுக்கு மின்டா தேவி கேள்வி

பாட்னா: 'எனது படம் இடம்பெற்ற டி-ஷர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்?' என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை நோக்கி வாக்காளர் பட்டியல் முறைகேடு சர்ச்சையில் பிரபலமான மின்டா தேவி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரியங்கா காந்தி, ஆர்.சுதா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் மின்டா தேவி மற்றும் அவரது படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்தனர். டி-ஷர்ட் பின்புறத்தில் ‘124 நாட் அவுட்’ என்று எழுதப்பட்டிருந்தது. பிஹார் வாக்காளர் பட்டியலில் 124 வயது மின்டா தேவியின் பெயர் முதல்முறை வாக்காளராக இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இவை தொடர்ந்து வெளிவரும்” என்றார். பிரியங்கா காந்தி கூறுகையில், “பிஹார் வாக்காளர் பட்டியலில் போலியாக இடம்பெற்றுள்ள பெயர்கள், முகவரிகள் என நிறைய உள்ளன” என்றார். சிவான் மாவட்டத்தின் தரவுண்டா சட்டப் பேரவை தொகுதியில் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்ட மின்டா தேவிக்கு 124 வயது அல்ல, 35 வயது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மின்டா தேவியின் விண்ணப்பப் படிவத்தில் உள்ள பிழை காரணமாக வாக்காளர் பட்டியலில் அவரது வயது மாறியுள்ளது” என்றார்.

நாடாளுமன்ற வளாகத்தை அதிர வைத்த இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு பேசிய பிஹாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணான மின்டா தேவி, "பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி எனக்கென்ன உறவு? எனது படம் இடம்பெற்ற டி-ஷர்ட்களை அணிய அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்? எனக்கு இது தொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து எந்த போன் அழைப்பும் வரவில்லை. ஆனால், திடீரென ஏன் ராகுலும், பிரியங்காவும் எனது நலன் விரும்பிகளாகிவிட்டனர். இதெல்லாம் எனக்குத் தேவையில்லை.

ஆயினும், வாக்காளர் பட்டியலில் எனது விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன. அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஆதார் அட்டையின்படி எனது பிறந்த தேதி ஜூலை 15, 1990. ஆனால் என் வயது 124 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விவரங்களை யார் உள்ளீடு செய்தாலும், அவர்கள் கண்களை மூடிக்கொண்டு அவ்வாறு செய்தார்களா என்று தெரியவில்லை? அரசாங்கத்தின் பார்வையில் எனக்கு 124 வயது என்றால், அவர்கள் ஏன் எனக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கவில்லை? வாக்காளர் பட்டியலில் எனது விவரங்கள் திருத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x