Published : 13 Aug 2025 02:16 PM
Last Updated : 13 Aug 2025 02:16 PM
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை காங்கிரஸ் முன்கூட்டியே உணர்ந்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே அக்கட்சி தேர்தல் ஆணையத்தின் மீது புகார் கூறுவதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் அனுராக் தாக்கூர், “ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஒரு நபரின் தலைமையின் கீழ் ஒரு கட்சி 90 முறை தோல்வி அடைந்தது என்றால் அது ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் சந்தித்த தோல்விகள்தான். இந்த தோல்வி ஒரு வரலாறாக மாறி உள்ளதால், ராகுல் காந்தியின் தலைமை குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தோல்வி அடையும்போதெல்லாம், ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறி வந்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக மோசடி செய்ததாக பலமுறை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும் என்றும் மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.
ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குப் பிறகும் காங்கிரஸ் புதிய காரணங்களைத் தேடுகிறது. அவர்கள் சுயபரிசோதனை செய்வதில்லை. மாறாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையம், அரசியல்சாசன அமைப்புகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், பிற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். 1952-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் சிபிஐ-யும் இணைந்து பி.ஆர்.அம்பேத்கரின் தோல்வியை உறுதி செய்தன. 1952-ம் ஆண்டிலேயே தேர்தல் ஊழலுக்கு அடித்தளமிட்ட கட்சி காங்கிரஸ்.” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT