Last Updated : 12 Aug, 2025 07:28 PM

2  

Published : 12 Aug 2025 07:28 PM
Last Updated : 12 Aug 2025 07:28 PM

செஸ் வரி வசூல் ரூ.3.69 லட்சம் கோடியை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை: மத்திய அரசு மீது சிஏஜி குற்றச்சாட்டு

புதுடெல்லி: 2023-24 நிலவரப்படி செஸ் வரி மூலம் மத்திய அரசு வசூலித்த ரூ.3.69 லட்சம் கோடி தொகையை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது.

2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமான வரிகளுக்கு கூடுதலாக குறிப்பிட்ட சதவிகித தொகை செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரி, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, எண்ணெய் துறை மேம்பாடு உட்பட பல்வேறு காரணங்களுக்காக, அந்த காரணங்களைக் குறிப்பிட்டு வசூலிக்கப்படுகிறது. 1974-ல் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இந்த செஸ் வரி, பல திட்டங்களுக்கு முறையாக ஒதுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு, தொடர்ந்து செயல்பட்டு வந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கையின்படி, முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு, எண்ணெய் துறை மேம்பாடு, சுகாதாரம், கல்வி மேம்பாடு ஆகிய காரணங்களுக்காக வசூலிக்கப்பட்ட செஸ் தொகை, உரிய முறையில் ஒதுக்கப்படவில்லை. மார்ச் 31, 2024 வரை ரூ.3,69,307 கோடி செஸ் வரி வசூல், அதற்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படவில்லை என மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.

எண்ணெய் தொழில் மேம்பாட்டு வாரியத்தின் (OIDB) வளர்ச்சிக்காக எண்ணெய் தொழில் (வளர்ச்சி) சட்டம் 1974 இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது செஸ் விதிக்கப்பட்டது. OIDB-ன் 2023-24 ஆண்டு அறிக்கையின்படி, 1974-75 நிதி ஆண்டில் இருந்து 2023-24 நிதி ஆண்டு வரை கச்சா எண்ணெய் மீதான மொத்த செஸ் வரி வசூல் ரூ. 2,94,850 கோடி. இதில், 1974-75 முதல் 1991-92 வரை OIDB-க்கு ரூ. 902.40 கோடி செஸ் தொகை ஒதுக்கப்பட்டது.

அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்படும் செஸ் தொகையில் இருந்து OIDB-க்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதாவது, எண்ணெய் துறையின் வளர்ச்சிக்காக செஸ் வரிசயாக அரசு ரூ. 2.9 லட்சம் கோடியை வசூலித்துவிட்டு அதில், ரூ.902 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது. அதாவது, வசூலிக்கப்பட்ட தொகையில் இது 0.3% மட்டுமே.

இதேபோல், கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக வசூலிக்கப்பட்ட செஸ் தொகையும் அதற்கென ஒதுக்கப்படவில்லை. 2004 முதல், மத்திய அரசு வசூலிக்கும் அனைத்து வரிகள் மீதும் கல்விக்கான செஸ் 2% வசூலிக்கப்பட்டது. மேலும், இடைநிலை மற்றும் உயர்கல்விக்கென 2007 முதல் வருமான வரி மற்றும் கூடுதல் கட்டணத்தில் கூடுதலாக 1% செஸ் வசூலிக்கப்பட்டது. பின்னர், 2018 முதல் இந்த இரண்டு செஸ் வரியைம் ஒன்றாக்கி 4% கல்வி வரியாக மாற்றியது.

2018-19 முதல் 2023-24 வரை செஸ் வரியாக வசூலித்த ரூ.37,537 கோடியை மத்திய அரசு சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் சுகாதார முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x