Published : 12 Aug 2025 04:26 PM
Last Updated : 12 Aug 2025 04:26 PM
புதுடெல்லி: டெல்லியில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 26,000 பேருக்கு தெருநாய்கள் கடித்ததாக புகார்கள் பதிவாகி உள்ளன. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
தெருநாய்கள் தொல்லை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், அனைத்து தெருநாய்களையும் காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டது. அதனையொட்டி, டெல்லி மாநகராட்சி சார்பில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. டெல்லியில் மட்டும் சுமார் 10 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, தெருநாய் தொல்லைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க ஒரு பிரத்யேக ஹெல்ப்லைனை நம்பரை டெல்லி மாநகராட்சி துவங்க உள்ளது.
டெல்லியின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, நடப்பாண்டில் கடந்த 7 மாதங்களில் இதுவரை டெல்லியில் மொத்தம் 26,334 நாய்க்கடி புகார்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 9,920 புகார்கள் டெல்லி மாநகராட்சி மருத்துவமனைகளில் பதிவாகியுள்ளன. அதுமட்டுமின்றி, டெல்லியின் ரேபிஸ் தடுப்பு மைய்யங்களில் 15,010 பேருக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 68,090 நாய்க்கடி புகார்கள் பதிவாகியுள்ளன.
தற்போது, டெல்லி மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் 5,471 ரேபிஸ் தடுப்பூசி (ARV) டோஸ்கள் மற்றும் 3,736 ரேபிஸ் சீரம் (ARS) டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. நடப்பாண்டில் ஜூலை 31 வரை டெல்லியில் 49 வெறிநாய்க்கடி புகார்கள் பதிவாகியுள்ளன. ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், தலைநகரம் முழுவதும் 35,198 விலங்குகள் கடி புகார்கள் பதிவாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் 2024-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2025 ஆண்டு வரை 97,994 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படவும் டெல்லி அரசு முடிவு செய்து, அதனை செயல்படுத்தி வருகிறது. தற்போது, டெல்லியில் 20 கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை பதிவு செய்யப்பட்ட அரசு சாரா நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. ஜனவரி 25 முதல் ஜூன் 25 வரை 65,000-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டில், 79,959 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. மேலும், அதற்கு முந்தைய ஆண்டு 59,076 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. டெல்லி மாநகராட்சி முழுவதும் தெருநாய்களின் பிரச்சினையைச் சமாளிக்க, தெருநாய் மேலாண்மை துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியின் அனைத்து மண்டலங்களிலும் நாய் காப்பகங்களுக்கு நிலம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சற்று காலதாமதம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT