Last Updated : 12 Aug, 2025 12:30 PM

8  

Published : 12 Aug 2025 12:30 PM
Last Updated : 12 Aug 2025 12:30 PM

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு எத்தகையது? - நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தெரு நாய்களை தெருக்களில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைப்பது என்பது அறிவியலுக்குப் புறம்பானது மற்றும் நடைமுறை சாத்தியமற்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி, “உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை செயல்படுத்த வேண்டுமானால், டெல்லி அரசு 2000 நாய்கள் காப்பகத்தை உருவாக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு கோபத்தின் வெளிப்பாடாக இருக்கிறதே தவிர, பகுத்தறிவுடன் எடுக்கப்பட்ட முடிவாக இல்லை.” என்று கூறியுள்ளார்,

விலங்குகள் நல அமைப்பான, பீட்டா இந்தியாவின் கால்நடை விவகாரத்துறை மூத்த நிர்வாகி மினி அரவிந்தன், “நாய்களுக்கு காப்பகங்களை அமைப்பது என்பது நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது. டெல்லியில் உள்ள சுமார் 10 லட்சம் தெரு நாய்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது அவற்றிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று கூறியுள்ளார்.

சூ மோட்டோ வழக்கும், தீர்ப்பும்: முன்னதாக நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று (திங்கள்கிழமை) பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும், தெரு நாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது பற்றி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் இதற்காக ஒரு படையை உருவாக்க வேண்டுமானால், அதை விரைவில் செய்யுங்கள்.

உடனடியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும். தற்போதைக்கு, மற்ற விதிகளை மறந்துவிடுங்கள்.

டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இந்த காப்பகங்களில், நாய்களை கையாளக் கூடிய, கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் இந்த நாய்களை வெளியே விடக்கூடாது. நாய்கள் இந்த காப்பகங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.

நாய்க்கடி சம்பவங்கள் குறித்து புகாரளிக்க ஒரு ஹெல்ப்லைனைத் தொடங்கவேண்டும். டெல்லி தெருக்களை முற்றிலும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்க கூடாது’ என உத்தரவிட்டனர்.

இந்த புதிய உத்தரவு நாய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அதேநேரம், நாய்களைப் பிடிப்பதற்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதன் மூலம், இதுவரை நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்த விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் ‘பீட்டா’ போன்ற அமைப்புகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x