Published : 12 Aug 2025 08:53 AM
Last Updated : 12 Aug 2025 08:53 AM
ஸ்ரீநகர்: ஜம்மு மாகாணத்தின் கிஷ்த்வார் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பாகிஸ்தானில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த பகுதி 2021 வரை தீவிரவாதத்தால் பாதிக்கப்படாத பகுதியாக இருந்தது. ஆனால் தற்போது பெரிய தீவிரவாத சம்பவங்கள் மற்றும் என்கவுன்ட்டர் நடைபெறும் முக்கிய தளமாக மாறிவிட்டது.
இந்த நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை தீவிரவாதிகள் தங்கியிருந்ததாக கருதப்படும் மலைப்பகுதியில் அமைந்துள்ள பதுங்கு குகைகளை பாதுகாப்பு படையினர் குண்டுவீசி தகர்த்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ மற்றும் புகை மூட்டத்தில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. தொடர்ந்து அந்தப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கிஷ்த்வார் மலைகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை விரட்டியடிக்க முயற்சித்து வரும் அதேவேளையில் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகால் காடுகளில் பாதுகாப்பு படையினர் நீண்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலின் 11 -வது நாளான சனிக்கிழமை ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
அகால் அடர் வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அகாலில் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கிய தேடுதல் வேட்டையின்போது நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உள்ளூர் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஆனால், இந்த மோதல் பின்னர் வனப் பகுதிக்கும் பரவியதால் தேடுதல் வேட்டையை தொடர்ந்து நடத்த வேண்டிய சூழல் பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டது. இதுவரை நடைபெற்ற மோதல்களில் 10 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT