Published : 12 Aug 2025 07:56 AM
Last Updated : 12 Aug 2025 07:56 AM
புதுடெல்லி: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடியாக சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் கூறும்போது, “உக்ரைன் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன். போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தாலும் ரஷ்யா அதற்கு சம்மதிக்கவில்லை’’ என்றார். மோடியுடன், ஜெலன்ஸ்கி நீண்ட நேரம் பேசியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறும்போது ‘‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியதிலும், சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைக் கேட்டதிலும் மகிழ்ச்சி’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்யா, உக்ரைன் இடையேயான போருக்கு அமைதியான தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விஷயத்தில் சாத்தியமான பங்களிப்பை வழங்க இந்தியா உறுதியாக இருப்பதாகவும், உக்ரைனுடனான இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும் உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT