Last Updated : 11 Aug, 2025 04:08 PM

22  

Published : 11 Aug 2025 04:08 PM
Last Updated : 11 Aug 2025 04:08 PM

தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்

புது டெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதனை தடுக்கும் எந்தவொரு அமைப்பின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும், தெரு நாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது பற்றி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் இதற்காக ஒரு படையை உருவாக்க வேண்டுமானால், அதை விரைவில் செய்யுங்கள்.

இருப்பினும், அனைத்து பகுதிகளையும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்றுவதற்கான முதல் மற்றும் முக்கிய நடவடிக்கையாக இது இருக்க வேண்டும். இதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது. உடனடியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும். தற்போதைக்கு, மற்ற விதிகளை மறந்துவிடுங்கள்.

டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இந்த காப்பகங்களில், நாய்களை கையாளக் கூடிய, கருத்தடை மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் இந்த நாய்களை வெளியே விடக்கூடாது. நாய்கள் இந்த காப்பகங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.

நாய்க்கடி சம்பவங்கள் குறித்து புகாரளிக்க ஒரு ஹெல்ப்லைனைத் தொடங்கவேண்டும். இதில் முக்கியமானது என்னவென்றால், ஒரு தெருநாய் கூட மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது. இது நடந்துள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். டெல்லி தெருக்களை முற்றிலும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்க கூடாது’ என உத்தரவிட்டுள்ளனர்

இந்த விஷயத்தில் நீதிபதி பர்திவாலா, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கருத்தைக் கேட்டபோது, தெரு நாய்களை இடமாற்றம் செய்வதற்கு டெல்லியில் ஓர் இடம் அடையாளம் காணப்பட்டதாகவும், விலங்கு உரிமை ஆர்வலர்கள் தடை உத்தரவைப் பெற்ற பிறகு இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி, "இந்த விலங்கு ஆர்வலர்களால் வெறி நாய்க்கடிக்கு இரையானவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா? ஒரு சில நாய் பிரியர்களுக்காக எங்கள் குழந்தைகளை நாங்கள் பலியிட முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x