Published : 11 Aug 2025 08:35 AM
Last Updated : 11 Aug 2025 08:35 AM
புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 2-வது ஆட்சி காலத்தில் இதுவரை 1,703 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 1,562 பேர் ஆண்கள், 141 பேர் பெண்கள்.
அதிகபட்சமாக பஞ்சாபைச் சேர்ந்த 620 பேரும், ஹரியானாவைச் சேர்ந்த 604 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 245 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 17 பேரும் விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 2009 முதல் 2024-ம் ஆண்டு வரை 15,564 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், சில கெடுபிடிகளை அமெரிக்கா பின்பற்றியது. இதனால் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு, மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT