Published : 11 Aug 2025 08:22 AM
Last Updated : 11 Aug 2025 08:22 AM
பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ ரயிலின் மஞ்சள் பாதையையும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஐடி ஊழியர்களும் ஓசூர் பயணிகளும் பெருமளவில் பயனடைவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார். அங்கிருந்து பெங்களூரு கெம்பேகவுடா ரயில் நிலையத்துக்கு சென்ற அவர், பெங்களூரு-பெலகாவி, அமிர்தசரஸ்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, அஜ்னி (நாக்பூர்)-புனே ஆகிய 3 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் ரூ.7160 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 19.1 கிமீ தொலைவை கொண்ட மஞ்சள் பாதையில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவையை ராகிகுட்டா மெட்ரோ நிலையத்தில் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் க்யூ ஆர் கோடு அடிப்படையில் செயல்படக்கூடிய டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் டிக்கெட்டை பெற்ற நரேந்திர மோடி, பெண் லோகோ பைலட் இயக்கிய மெட்ரோ ரயிலில் எலக்ட்ரானிக் சிட்டி வரை பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோரும், பள்ளி குழந்தைகளும், இந்த மெட்ரோ பாதையின் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களும் பயணித்தனர். பெங்களூரு தொழில்நுட்ப பூங்காவில் ரூ.15,610 கோடி மதிப்பிலான 3-ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வளர்ச்சி அடைந்த புதிய இந்தியாவின் முகமாக பெங்களூரு திகழ்கிறது. உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் பெங்களூரு முன்னணி நகரமாக விளங்குகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பெங்களூருவுக்கு முதல் முறையாக வந்துள்ளேன்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வாயிலாக இந்தியாவின் புதிய முகத்தை உலகம் பார்த்தது. பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்ததை உலகமே கண்டு வியந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்கு பெங்களூருவின் தொழில்நுட்ப திறன் முக்கிய காரணியாக இருந்தது.
அதற்காக பெங்களூருவின் மக்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய நகரங்கள் அதி நவீனமாகவும், மறு சீரமைப்பை கொண்டதாகவும் இருக்க வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது நம் நாட்டில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்தது. தற்போது 24 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கிறது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.
பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் அதிகமாக இயங்கிவரும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதிக்கு மெட்ரோ ரயில் சேவை கிடைத்துள்ளதால் ஐடி ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மஞ்சள் பாதை ரயில் சேவை தமிழக எல்லைக்குமிக அருகில் இருப்பதால் ஓசூரில் இருந்து தினமும் பெங்களூரு வந்து செல்லும் மக்கள் பெருமளவில் பயனடைவார்கள் என தெரிகிறது. இதன் காரணமாக பெங்களூரு ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT