Published : 11 Aug 2025 08:02 AM
Last Updated : 11 Aug 2025 08:02 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் திறக்கப்பட்ட செனாப் பாலம் வழியாக 1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தது. ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதி என்பதால் அங்கு வலுவான தரைவழி போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்தது. அதனால் அங்கு பிரம்மாண்ட கட்டிடங்கள் அமைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போது ஜம்மு காஷ்மீரில் ரயில்வே கட்டமைப்புகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 4315 அடி நீளத்தில், ஆற்றில் இருந்து 1,178 அடி உயரத்தில் இரும்பு மற்றும் கான்கிரீட் ரயில் பாலம் கடந்த 3 ஆண்டு காலமாக அமைக்கப்பட்டு வந்தது. இந்த பாலம் கடந்த ஜுன் 6-ம் தேதி திறக்கப்பட்டது.
அதேபோல் செனாப் ஆற்றில் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே 2380 அடி நீளம், 1086 அடி உயரத்தில் கேபிள் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதைகள் வழியாக ரயில்கள் இயக்கப்பட்டு பல கட்ட சோதனைகள் நிறைவடைந்தன. இந்நிலையில் முதல் சரக்கு ரயில் பஞ்சாப்பில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு கடந்த வெள்ளி கிழமை இயக்கப்பட்டது. சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் 1,400 டன் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்டன.
மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட இந்த சரக்கு ரயில் 18 மணி நேரத்துக்குள் 600 கி.மீ பயணம் செய்து கடந்த சனிக்கிழமை காலை ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தது. இந்த சரக்கு ரயில் செனாப் மற்றும் ஆஞ்சி ரயில் பாலங்களை கடந்து சென்றது, அந்த பாலத்தின் வலிமையையும், இந்திய ரயில்வேயின் நவீன கட்டமைப்பையும் பறைசாற்றுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு அதிகளவிலான சிமென்ட் மூட்டைகள் கொண்டு செல்லப்படுவது, அங்கு நடைபெறும் கட்டமைப்புதிட்டங்களுக்கு மிக முக்கியமானது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் சரக்கு மையமும் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், காஷ்மீருக்கு குறைந்த போக்குவரத்து செலவில் சரக்குகளை கொண்டு செல்வது மேம்படும். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சி இனி வேகம் எடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT