Published : 11 Aug 2025 08:02 AM
Last Updated : 11 Aug 2025 08:02 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழ் குடும்பத்தின் குழந்தைகள் தமிழ் வழிக் கல்வி பெறுகின்றனர்.
சில மாநிலங்களில் தனியாக நிர்வாகிக்கப்படும் தமிழ்வழிக் கல்விக்கான பள்ளிகளும் 12 -ம் வகுப்பு வரை நடைபெறுகின்றன. இவற்றுக்கு 1 முதல் 12 வகுப்புகள் வரை தேவைப்படும் தமிழ்நாட்டு அரசு பாட நூல்கள் இலவசமாகக் கிடைத்து வந்தன. இதன் விநியோகத்தை நடப்பாண்டு முதல் தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசின் பணநெருக்கடி காரணமாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இந்து தமிழ் திசை நாளேட்டிற்கு கிடைத்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் கழகத்தின் உறுப்பினர் செயலரும், உதவி இயக்குநருமான ஞ. சாமுண்டீஸ்வரியின் ஜுலை 27 தேதியிட்ட கடிதத்தின்படி, ‘‘2025-26 கல்வியாண்டிற்கான தமிழ் பாடநூல்களுக்கானத் தொகையினை மேற்கொள்ள இயலாது என்றும் மேற்படி நூல்களை இலவசமாக அளிக்கும்படி கோரப்பட்டுள்ளது.
1 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடநூல்கள் ஒவ்வொரு வகுப்பிற்கும் 10 பிரதிகள் இலவசமாகவும், மீதியுள்ள பிரதிகளுக்கானத் தொகை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சுமார் நாற்பது வருடங்களுக்கும் மேலாக இந்த பாடநூல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாகவே அளிக்கப்பட்டு வந்தது. இதன் மதிப்பு கோடி ரூபாயை தாண்டும்.
உதாரணமாக தில்லி தமிழ் சங்கத்திற்கு மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பாட நூல்கள் வருடந்தோறும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இந்த திடீர் நிறுத்தத்தால் தமிழ் சங்கங்களின் தமிழ் பள்ளிகளுக்கு தமிழ் பாடநூல்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில், ஏற்கெனவே நிதிச்சுமையால் பெரும்பாலான தமிழ் சங்கங்கள் பாதிப்படைந்து வருவதாகத் தெரிகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் வெளிமாநில நகரங்களின் தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘மாநில அரசுகளிடமிருந்தும், மத்திய அரசிடமிருந்தும் எங்களுக்கு எந்த நிதி உதவியும் கிடைப்பதில்லை. தமிழ்நாடு அரசின் முடிவால் வெளிமாநிலங்களில் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் தொய்வு ஏற்படும் அபாயமும் உள்ளது.’ எனத் தெரிவித்தனர்.
பல்வேறு நகரங்களின் தமிழ் சங்கங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக போதிக்கப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசின் இலவச நூல்களால் அப்பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகள் பலனடைந்து வந்தன. இந்த திடீர் ரத்து தமிழக முதல்வர் கவனத்திற்கும் சென்றிருக்காது என நம்பி முதல்வர் தனிப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்தும், இல்லை என்பதே பதிலாக கிடைத்ததால் தமிழ் சங்கங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT