Published : 10 Aug 2025 02:07 PM
Last Updated : 10 Aug 2025 02:07 PM
புதுடெல்லி: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேர்தல்களில் ‘வாக்கு திருட்டு’ மோசடி நடந்துள்ளதாக அண்மையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அவரிடம் இருந்து உறுதிமொழி பத்திரம் கேட்டிருந்தது.
மொத்தம் 5 விதமாக இந்த வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக இணையவழி பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இதில் மக்கள் இணையவும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த இணையவழி பிரச்சாரத்தின் மூலம் வாக்கு திருட்டு சார்ந்து தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை பெறவும் மற்றும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது.
இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “வாக்கு திருட்டு விவகாரம், ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்று அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிராக உள்ளது. நியாயமான தேர்தல் முறைக்கு இது அவசியம். வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்தை நாங்கள் கோருகிறோம். இதை மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தணிக்கை செய்ய முடியும்.
எங்களது இந்த கோரிக்கையில் இணைந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்துங்கள் என நான் கேட்டுக் கொள்கிறேன். votechori.in/ecdemand அல்லது 9650003420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இதில் இணையலாம். இந்தப் போராட்டம் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கானது.” என அந்த ட்வீட்டில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் வெளியிட்டுள்ள இந்த இணைய பக்கத்தில் பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, மாநிலம் மற்றும் தொகுதி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்படுகின்றன. அதை கொடுத்து இந்த பிரச்சாரத்தில் இணையும் பட்சத்தில் டிஜிட்டல் சான்று ஒன்று இமேஜ் ஃபைலாக கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT