Published : 10 Aug 2025 07:17 AM
Last Updated : 10 Aug 2025 07:17 AM
புதுடெல்லி: உ.பி.யின் பெரும்பாலான மாவட்டங்களில் குரங்குகள் தொல்லை என்பது சாதாரணமாக உள்ளது. பிலிபித்தின் பில்சந்தா காவல் நிலையத்திலும் குரங்குகளின் இதுபோன்ற தொல்லை அதிகரித்துள்ளது.
இதனை சமாளிக்க பில்சந்தா போலீஸார் ஒரு புதிய உத்தியை கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் லங்கூர் எனப்படும் கருங்குரங்கை காவல் நிலையத்தில் கட்டி வைத்துள்ளனர். லங்கூர் குரங்கை பார்த்து சிவப்பு முகக் குரங்குகள் அச்சப்படும் என்பதால் இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் குரங்கு சிலசமயம் காவல் நிலைய ஆய்வாளரின் மேசையிலும் சொகுசாக அமர்ந்து பழங்களை உண்கிறது. இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பில்சந்தா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்தாந்த் சர்மா கூறும்போது, ‘‘இந்த குரங்குகளால் காவலர்களின் தொப்பிகள், முக்கிய கோப்புகளை இழந்துள்ளோம். சிலசமயம் நாங்கள் சீருடைகளை மாற்றவதற்காக கழட்டி வைத்தால் அதையும் குரங்குகள் வெளியே எடுத்துச்சென்று வீசி விடுகின்றன. வேறிவழியின்றி குரங்குகள் பார்த்து அச்சப்படும் லங்கூர் குரங்கை பாதுகாப்புக்கு வைத்துள்ளோம். இரண்டு வருடங்களுக்கு முன் லங்கூர் உருவத்தில் ஒரு கட்-அவுட் வைத்தோம். ஆனால் அதைக்கண்டு குரங்குகள் அஞ்சுவதில்லை என்பதால் அசல் குரங்கையே காவலுக்கு வைத்துள்ளோம்’’ என்றார்.
தற்போது பிலிபித் மாவட்டத்தின் மற்ற காவல் நிலைய போலீஸாரும் லங்கூர் குரங்கை தேடி வருகின்றனர். இவற்றை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களுக்கு வாடகைத் தொகை அளிக்க வேண்டும் என்பதால் இதற்காக ஒரு பட்ஜெட் ஒதுக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உ.பி.யின் கோண்டா வனவட்டத்தின் வன அதிகாரி தமிழர் செம்மாறன் கூறுகையில், ‘‘உ.பி.யில் குரங்குகளின் எண்ணிக்கைகள் அதிகரித்து விட்டதால் தொல்லைகளும் கூடி விட்டன. இதை சமாளிக்க பொதுமக்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ல் திருத்தம் செய்து அதன் பாதுகாப்பு பட்டியலில் 2023 ஏப். 1 முதல் குரங்குகள் நீக்கப்பட்டு விட்டன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT