Published : 09 Aug 2025 02:09 PM
Last Updated : 09 Aug 2025 02:09 PM
பெங்களூரு: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ஒரு பெரிய போர் விமானம் மற்றும் 5 போர் விமானங்கள் என 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
விமானப்படையின் 16-வது ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம்.கத்ரேவின் நினைவு சொற்பொழிவு இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், தனது உரையின்போது பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதன் புகைப்படங்களை பார்வையாளர்களுக்கு திரையில் காண்பித்து விளக்கினார்.
அப்போது அவர், “பாகிஸ்தானின் பஹவல்பூரில் இருந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைமையகத்தை நாங்கள் தாக்குவதற்கு முன்பும் தாக்கிய பின்பும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. தற்போது இங்கே எந்த தடையமும் இல்லை. அதேநேரத்தில், அருகிலுள்ள கட்டிடங்கள் அப்படியே உள்ளன. எங்களிடம் செயற்கைக்கோள் படங்கள் மட்டுமல்ல, உள்ளூர் ஊடகங்களிலிருந்தும் படங்கள் கிடைத்தன, அவற்றின் மூலம் நாங்கள் துல்லிய தாக்குதல் நடத்த முடிந்தது.
நமது விமானப்படைத் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளன. நாங்கள் சமீபத்தில் வாங்கிய எஸ்-400 அமைப்பு, ஒரு கேம் சேஞ்சராக இருந்து வருகிறது. அந்த அமைப்பின் வீச்சு, அவர்களிடம்(பாகிஸ்தான்) உள்ள நீண்ட தூர சறுக்கு குண்டுகள், போர் விமானங்கள் ஆகியவற்றை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது. எஸ்-400ஐ அவர்களால் ஊடுருவ முடியாததால் அவர்களின் ஆயுதங்களை நமக்கு எதிராக பயன்படுத்த முடியவில்லை...” என தெரிவித்தார்.
விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் தனது உரையை நிறைவு செய்த பிறகு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்களுடனும் கலந்துரையாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT