Last Updated : 09 Aug, 2025 10:36 AM

9  

Published : 09 Aug 2025 10:36 AM
Last Updated : 09 Aug 2025 10:36 AM

அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால்? - ட்ரம்ப்புக்கு மாநிலங்களவை எம்.பி கடிதம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் குமார் மிட்டல்

புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்? என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கடிதம் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் குமார் மிட்டல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தை அவர் எக்ஸ் தளத்தில் அண்மையில் பகிர்ந்திருந்தார். அதில் கூறியுள்ளதாவது: “ஆக.6-ம் தேதி உங்களின் அரசு நிர்வாகம் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 25% வரியை விதித்தது. ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இந்தியா வாங்குவதைக் காரணம் காட்டி மொத்த வரியை 50% ஆக உயர்த்தி உள்ளீர்கள். நீண்ட கால கூட்டாண்மையைக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நடவடிக்கை மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

இந்திய பொருளாதாரத்தை மாண்ட பொருளாதாரம் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் இந்த மாண்ட பொருளாதாரம்தான் உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. விரைவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். உலக அளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நாடு. அமெரிக்க நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 80 பில்லியன் டாலர்களை இந்திய சந்தையிலிருந்து ஈட்டுகின்றன. அமெரிக்காவின் டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியர்கள் எழுதும் கோடிங் அடிப்படையில் தான் இயங்குகிறது.

அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து யுரேனியம் மற்றும் ரசாயனங்களை சத்தமின்றி இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா உடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமா?

இதே ஆகஸ்ட் மாதத்தில் 1905-ம் ஆண்டு இந்தியாவில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. அது இந்திய பொருளாதாரத்தில் அந்நிய தேச செயல்பாடுகளை கட்டுப்படுத்தியது. 146 கோடி இந்தியர்கள் இன்று அந்த உணர்வை வெளிப்படுத்தி, அமெரிக்க வணிக நிறுவனங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், அதன் தாக்கம் இந்தியாவை விட அமெரிக்காவிற்கு மிகவும் கடுமையானதாக இருக்கும். அதிபரே கருத்து வேறுபாட்டை விட பேச்சுவார்த்தை மேற்கொள்வதுதான் சிறந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை இல்லை: வரிவிகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் 25 சதவீத வரி விதிப்பு 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x