Published : 08 Aug 2025 07:07 AM
Last Updated : 08 Aug 2025 07:07 AM
புதுடெல்லி: ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலி நிறுவனங்கள் பெயரில் சுமார் ரூ.5,000 கோடிக்கு போலி ரசீது (இன்வாய்ஸ்) தயாரித்து முறைகேடான வழியில் ரூ.730 கோடிக்கு மேல் `இன்புட் டாக்ஸ் கிரெடிட்' பெற்றதன் மூலம் அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் முக்கிய குற்றவாளியான சிவகுமார் தியோரா கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை கடந்த மே மாதம் முதல் சுற்று சோதனை நடத்தியது.
இந்நிலையில் சிவகுமார் தியோராவிடம் நடத்திய விசாரணையில் இந்த முறைகேட்டில் கூடுதல் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான புதிய மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்க துறை நேற்று 12 இடங்களில் சோதனை நடத்தியது. ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் ஆவணங்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா என்ற விவரத்தை அமலாக்கத் துறை பகிர்ந்து கொள்ளவில்லை.
என்றாலும் விசாரணை தொடர்வதாக தெரிவித்துள்ளது. முறைகேட்டில் பிற தொடர்புகள் உறுதியான பிறகு அது தொடர்பான தகவல்களை அமலாக்கத் துறை பகிர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “வரி மோசடி வழக்குகளில் போலி ரசீதுகள் மற்றும் போலி நிறுவனங்களை பயன்படுத்துவது பொதுவான நடைமுறையாக உருவெடுத்துள்ளது. என்றாலும் நிதி கண்காணிப்பு நடைமுறையை தீவிரப்படுத்துவதன் அவசியத்தை இந்த வழக்கு நமக்கு உணர்த்துகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT