Published : 08 Aug 2025 06:50 AM
Last Updated : 08 Aug 2025 06:50 AM
சென்னை: ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று ரெப்பேஜ் சுற்றுகள் மற்றும் 3-வது சுற்றுபோட்டிகள் நடைபெற்றன. ஆடவர் ஓபன் 2-வது சுற்றில் (ரெப்பேஜ்) கடும் மோதல் இருந்தது. ஆக்ரோஷமான முன்பக்க தாக்குதலுடன் தொடக்கத்திலேயே மிரட்டிய கொரியாவின் கனோவா ஹீஜே, ஹீட்டில் 16.67 புள்ளிகளை குவித்ததுடன் 4.17 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மகளிர் ஓபன் 2-வது சுற்றில் (ரெப்பேஜ்) இந்தியாவின் ஷ்ரிஷ்டி செல்வம், கமலி மூர்த்தி சிறப்பாக செயல்பட்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினர். தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் ஷ்ரிஷ்டி செல்வம் 3.03 புள்ளிகளையும், கமலி மூர்த்தி 5.57 புள்ளிகளையும் மட்டுமே பெற்றனர். இது கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு போதுமானதாக இல்லை. இதன் மூலம் இந்த சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர் அணியின் பயணம் முடிவுக்கு வந்தது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ரெப்பேஜில், இந்தியாவின் பிரஹ்லாத் ராம் சிறந்த திறனை வெளிப்படுத்தி 4.60 புள்ளிகளுடன் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். சாம்பியன்ஷிப்பில் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், 5-வது நாளான இன்று (8-ம் தேதி ) மகளிர் ஓபன் காலிறுதிப் போட்டிகள், ஆடவர் ஓபன் 3-வது சுற்று, யு-18 சிறுவர்கள் 3-வது சுற்று மற்றும் யு-18 சிறுமியர் 2-வது சுற்று (ரெப்பேஜ்) ஆகியவை நடைபெறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT