Published : 08 Aug 2025 12:12 AM
Last Updated : 08 Aug 2025 12:12 AM
புதுடெல்லி: விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் நலனில் இந்தியாசமரசம் செய்து கொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத்தராது. அதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிவிகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த 6 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் இருந்து பால், பாலாடை கட்டி, நெய் ஆகியவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்ய அந்த நாடு விரும்புகிறது. இது இந்திய விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதால் அமெரிக்க பால் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதேபோல, அமெரிக்காவில் இருந்து கோதுமை, சோயாபீன், சோளம், ஆப்பிள், திராட்சை, கொட்டை வகைகளை இந்தியாவில் விற்பனை செய்யவும் அந்த நாடு அனுமதி கோரி வருகிறது. அதோடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களையும் இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்கா விரும்புகிறது. அதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
மேலும், ‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது. அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யவேண்டும்’ என்றும் ட்ரம்ப் நிர்ப்பந்தம் செய்து வருகிறார். ஆனால்,அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து கச்சாஎண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
இந்த சூழலில், இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்து ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக வேளாண்விஞ்ஞானி மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய, எம்.எஸ்.சுவாமிநாதன் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நான் குஜராத் முதல்வராக இருந்த காலத்திலேயே அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தேன்.
ஒரு காலத்தில் குஜராத்தில் வறட்சி, புயல் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. அப்போது,குஜராத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி எம்.எஸ்.சுவாமிநாதன்தான் எங்களை வழிநடத்தினார். தமிழகத்தில் உள்ள அவரது ஆராய்ச்சி அறக்கட்டளை மையத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருக்கிறேன். கடந்த 2017-ல் அவரது புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த 2018-ல் வாராணசியில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிராந்திய மையம் திறக்கப்பட்டது. அப்போது அவரது வழிகாட்டுதல்கள் பெரிதும் பயனுள்ளதாக இருந்தன. கடந்த ஆண்டில் அவருக்கு‘பாரத ரத்னா' விருது வழங்கும் வாய்ப்பு எனது தலைமையிலான அரசுக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
நாட்டின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட அவர், இயற்கை விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளித்தார். அவரை கவுரவிக்கும் வகையில் ‘உணவு மற்றும் அமைதிக்கான எம்.எஸ். சுவாமிநாதன் விருது' நிறுவப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பால், பருப்பு வகைகள், சணல் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திலும், அரிசி,கோதுமை, பருத்தி, பழங்கள், காய்கறிகள், மீன் உற்பத்தியில் 2-வது இடத்திலும் உள்ளது. எண்ணெய் வித்துக்கள் சாகுபடியிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறோம். விவசாயிகளின் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரின் நலன்களில் மத்திய அரசு சமரசம் செய்துகொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத் தராது. இதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.
அவர்களது நலன்களை காக்க ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் அவர்களது விவசாய செலவினங்களை குறைக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாடு முழுவதும் 10,000 வேளாண்உற்பத்தியாளர் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எளிதாக விற்பனை செய்ய மின்னணு தேசிய வேளாண் சந்தை வெற்றிகரமாக செயல்படுகிறது. நாடு முழுவதும் உணவு பதப்படுத்தும் மையங்கள், சேமிப்பு கிடங்குகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 100 மாவட்டங்கள் தேர்ந்தெ
டுக்கப்பட்டு, அங்கு விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு பிரதமர் பேசினார்.
சீனா கடும் விமர்சனம்: இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து இந்தியாவுக்கான சீன தூதர் சூ பிஹோங் நேற்று தனது சமூக வலைதள பதிவில், ‘ஒருவரது பேராசைக்கு அடிபணிந்தால், அவர் மீண்டும் மீண்டும் நம்மை மிரட்டி ஆதாயம் அடைய முயற்சி செய்வார். இடத்தை கொடுத்தால் மடத்தை பறிப்பார்’ என்று தெரிவித்துள்ளார். அத்துடன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ - பிரேசில் அதிபரின் சிறப்பு ஆலோசகர் செல்சோ இடையிலான தொலைபேசி உரையாடல் விவரத்தையும் சீன தூதர் சூ பிஹோங் பகிர்ந்துள்ளார். “வரி விகிதத்தை ஆயுதமாக பயன்படுத்தி இதர நாடுகளை அடிபணிய வைக்க முயற்சி செய்வது ஐ.நா. மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிரானது. இத்தகைய செயல்கள் நிலைத்திருக்காது’’ என்று அதில் சீன அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT