Last Updated : 07 Aug, 2025 08:39 PM

11  

Published : 07 Aug 2025 08:39 PM
Last Updated : 07 Aug 2025 08:39 PM

5 விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்தது எப்படி? - ராகுல் காந்தி விவரிப்பு

புதுடெல்லி: கடந்த 2024 மக்களவை தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்துள்ளதாகவும், இதன் மூலம் மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர், ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக விவரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஆக.5) காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி விவரித்ததன் முக்கிய அம்சங்கள்: “நமது அரசியலமைப்பின் அடித்தளம், ‘ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கும்’ என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டதுதான். எனவே, நாம் தேர்தல்களைத் திட்டமிடும்போது, மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால், ‘ஒரு நபர், ஒரு வாக்கு’ என்ற கருத்து எவ்வளவு பாதுகாப்பானது என்பதுதான்.

தேர்தலில் சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? போலி நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்களா? வாக்காளர் பட்டியல் துல்லியமானதா என்பதை பார்க்க வேண்டும். சில காலமாக, சில புள்ளி விவரங்களின் அடிப்படையில் பொதுமக்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு ஜனநாயகத்திலும், ஒவ்வொரு அரசியல் கட்சியையும் தாக்கும் ஒன்றுதான் ஆட்சிக்கு எதிரான நிலை. ஏதோ ஒரு காரணத்துக்காக, ஜனநாயகக் கட்டமைப்பில் ஆட்சிக்கு எதிரான போக்கால் பாதிக்கப்படாத ஒரே கட்சியாக பாஜக மட்டும்தான் தெரிகிறது. அதைத்தான் கோடிக்கணக்கான இந்தியர்கள் சந்தேகித்தனர்.

ஆட்சிக்கு எதிரான போக்கில் இருந்து பாஜக ‘மாயாஜாலம்’ ஆக விடுபட்டுள்ளது, பாஜகவுக்கு மிகப் பெரிய மற்றும் எதிர்பாராத வெற்றி வித்தியாசங்கள், கருத்துக்கணிப்புகள் மற்றும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளில் இருந்து முடிவுகள் வெகுதொலைவில் உள்ளன. ஊடகங்களால் ‘பிம்ப’ கட்டிடம் ஒழுங்கமைக்கப்பட்டன, நர்த்தனமாடிய தேர்தல் அட்டவணை உள்ளிட்டவை இதற்கான காரணிகள்.

ஒரே தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் திருட்டு: கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில், 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் நடந்திருந்தால், நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். ஐந்து விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன. போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 தவறாக பயன்படுத்தப்படுவது ஆகியவை அந்த ஐந்து வகை.

நாட்டிலுள்ள இளைஞர்களின் வாக்குகள் திருடப்படுகின்றன. வாக்குகளை யார் திருடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முன்பு, எங்களிடம் ஆதாரம் இல்லை, ஆனால் இப்போது எங்களிடம் நூறு சதவீதம் ஆதாரம் உள்ளது. அனைத்துத் தரவுகளும் கிடைத்துள்ளன. இந்த வாக்குத் திருட்டு பல தொகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் இப்போது சாக்குப்போக்கு சொல்லக்கூடாது. அவர்கள் எங்களுக்கு சிசிடிவி காட்சிகள் மற்றும் மின்னணு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும். இது எனது கோரிக்கை மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையும் ஆகும். இது சவாலானதும் கூட.

எங்களிடம் உள்ள லட்சக்கணக்கான ஆவணக் காகிதத்தை அடுக்கி வைத்தபோது அது 7 அடி உயரம் இருந்தது. அதை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்த வேண்டியிருந்தது. யாராவது இரண்டு முறை வாக்களித்திருக்கிறார்களா அல்லது வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இரண்டு முறை வந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க நான் விரும்பினேன் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு தாளிலும் உள்ள ஒவ்வொரு புகைப்படத்துடனும் அவர்களின் படத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதுதான் செயல்முறை. இது மிகவும் கடினமானது.

இதை நாங்கள் எதிர்கொண்டபோது, தேர்தல் ஆணையம் ஏன் எங்களுக்கு மின்னணு தரவை வழங்கவில்லை என்பதை உணர்ந்தோம். அவர்கள் அதை கவனமாக ஆய்வு செய்ய விரும்பவில்லை. இந்தப் பணி எங்களுக்கு ஆறு மாதங்கள் எடுத்தது. 30-40 பேர் இடைவிடாமல் வேலை செய்து, பெயர்கள், முகவரிகள் மற்றும் படங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். மேலும் இது ஒரு தொகுதிக்கு மட்டுமே.

தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவை வழங்கியிருந்தால், அதற்கான நேரம் வெறும் 30 விநாடிகள் மட்டுமே இருந்திருக்கும். அதனால்தான் இந்த வடிவத்தில் எங்களுக்கு தரவு வழங்கப்படுகிறது. அதனால் அது பகுப்பாய்வு செய்யப்படவில்லை. இந்த ஆவணங்கள் மின்னணு கேரக்டர் அங்கீகாரத்தை அனுமதிக்காது; நீங்கள் அவற்றை ஸ்கேன் செய்தால், நீங்கள் தரவைப் பிரித்தெடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே இயந்திரத்தால் படிக்க முடியாத ஆவணங்களை வழங்குகிறது. இது எங்களுக்கு விசித்திரமாகத் தோன்றியது.

மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போலி மற்றும் தவறான முகவரிகள் மூலம் 40,009 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண் ‘0’ என்று இருக்கிறது. இது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குற்றம் ஆகும். நான் அரசியல்வாதி. நான் மக்களிடம் பேசுகிறேன். இதை எனது உறுதிமொழியாக எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கம்: பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x