Published : 07 Aug 2025 06:37 PM
Last Updated : 07 Aug 2025 06:37 PM
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெ.பி. நட்டாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகாரம் அளித்துள்ளதாக கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு, "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது.
இதில், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி. நட்டாவுக்கு வழங்குவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைவரும் ஒருமனதாக ஏற்றக்கொண்டனர்" என தெரிவித்தார்.
முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், “வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21. மாநிலங்களவை செயலாளர்தான் தேர்தல் அதிகாரி. வேட்பு மனுக்களை வேட்டாளர்கள், மாநிலங்களவை அறை எண் 28-ல் தேர்தல் அதிகாரி அல்லது துணை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். பொது விடுமுறை இல்லாத நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும். இதற்கான வைப்புத் தொகை ரூ.15,000.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெறும். போட்டி இருந்தால் தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும். வாக்காளர்கள் காலை 10 மணி முதல் 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் F-101ல் வாக்குகளை செலுத்தலாம்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த பதவியிடம் காலியாக இருப்பதை கடந்த ஜூலை 22 வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT