Last Updated : 07 Aug, 2025 03:15 PM

 

Published : 07 Aug 2025 03:15 PM
Last Updated : 07 Aug 2025 03:15 PM

ரக்‌ஷா பந்தன் | உ.பி.யில் பெண்களுக்கு 3 நாட்கள் இலவச பேருந்து பயணம்: முதல்வர் யோகி சலுகை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு 3 நாள் இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஆகஸ்ட் 9-ல் வரவிருக்கும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பரிசாகக் கருதப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு இலவச பயணத்தைத் தொடங்கினார். எனினும், 2024-ம் ஆண்டு வரை ஒரு நாளைக்கு மட்டும் என இருந்த இந்த இலவசப் பயண வசதி, மூன்று நாட்களுக்கு என மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடப்பு வருடத்திற்கும் தொடர்கிறது.

இது குறித்து முதல்வர் யோகி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’உபிஎஸ்ஆர்டி பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நகர்ப்புற பேருந்து சேவையிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் இந்த வசதி கிடைக்கும். ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நள்ளிரவு வரை இலவசப் பயணம் தொடங்கும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, உபி மாநில அரசு பேருந்து நிறுவனத்திடம்13,850 பேருந்துகள் உள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த 2022 இல் 12,758 என இருந்தன. சென்ற 2024 ஆம் ஆண்டு ரக்‌ஷா பந்தன் நாள் அன்று, 19.78 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் செய்தனர். இதற்காக, உபி அரசிற்கு ரூ.19.87 கோடி செலவானது. அதேபோல், 2023 ஆம் ஆண்டு ரக்‌ஷா பந்தனில் 22 லட்சம் பெண்களின் பயணித்திற்காக, ரூ.27.66 கோடி செலவிடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x