Last Updated : 06 Aug, 2025 08:05 PM

 

Published : 06 Aug 2025 08:05 PM
Last Updated : 06 Aug 2025 08:05 PM

டெல்லி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் ஐபோன் 16 புரோ - நெட்டிசன்கள் கொந்தளிப்பு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 70 பேருக்கும் ஐபோன் 16 புரோ, ஐபேட் மற்றும் டேப்லெட் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காகித பயன்பாடு இல்லாத டிஜிட்டல் சட்டப்பேரவை என்ற நகர்வின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு, நெட்டிசன்கள் கொந்தளிப்புடன் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

NeVA எனப்படும் தேசிய இ-விதான் அப்ளிகேஷன் முயற்சியின் கீழ் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி முதல் முறையாக பேரவை கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதிய டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், டெல்லி பேரவைக்கு தேவையான மின்சாரம் முழுவதும் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது. இதன் மூலம் தேசத்திலேயே முழுவதும் சூரிய சக்தி மின்சாரம் மற்றும் டிஜிட்டல் மயமான முதல் பேரவையாக டெல்லி சட்டப்பேரவை மாற்றம் கண்டுள்ளது.

மத்திய அரசின் NeVA முயற்சியின் கீழ் டெல்லி பேரவை உறுப்பினர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. அதன்படி ஸ்மார்ட் மைக், வோட்டிங் பேனல், என்எஃப்சி என்ட்ரி, பல்வேறு மொழிகளை பயன்படுத்தும் ஆப்ஷன், ஐபேட் மூலம் உடனடியாக அலுவல் சார்ந்து கோப்புகளை அக்சஸ் செய்யும் வசதி என அனைத்தும் டெல்லி பேரவையில் டிஜிட்டல் மயமாகி உள்ளது. இது தற்போது நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கொதிப்படைந்த நெட்டிசன்கள்: இந்த தகவல் வெளியானதும், அதை அறிந்து சமூக வலைதள பயனர்கள் கொதிப்படைந்தனர். ‘எங்களது வரிப்பணம் தான் விரயம்’, ‘மேக்-இன்-இந்தியா என்ன ஆனது?’, ‘டெல்லியில் வரி செலுத்துவோர் எம்எல்ஏ-க்களுக்கு ஐபோன் 16 புரோ பரிசளித்தனர் என செய்தி போடுங்கள்’, ‘மக்கள் 24 மாத இஎம்ஐ மூலம் ஐபோன் வாங்கினால். எம்எல்ஏ-க்கள் இலவசமாக அதை பெறுகின்றனர்’ என நெட்டிசன்கள் தங்களது சமூக வலைதள பதிவுகளில் தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 புரோ ‘128 ஜிபி ஸ்டோரேஜ்’ வேரியன்ட்டின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,19,900 என ஆப்பிள் நிறுவன வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜக தரப்பில் 48 எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் 22 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஐபோன் 16 புரோ வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x