Published : 06 Aug 2025 08:02 PM
Last Updated : 06 Aug 2025 08:02 PM
தாராலி: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியின் தரளி பகுதியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு - பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. இதுவரை 190 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தரளியில் பகுதியில் நேற்று பிற்பகலில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. தரளியில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ராணுவம், ஐடிபிபி, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. தொடர் மழையால் மீட்புப் பணிகளில் தடைகள் ஏற்பட்டுள்ள நிலையில், 150 பேர் கொண்ட ராணுவக் குழு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
சாலைகள் சேதம்: உத்தரகாசியில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக, பர்த்வாரி, லிஞ்சிகாட் மற்றும் கங்க்ரானி அருகே உள்ள முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. தரளியில் உள்ள ஒரு சிவில் ஹெலிகாப்டர் தளமும் மண் சரிவு காரணமாக செயல்படவில்லை. "சவாலான நிலப்பரப்பு மற்றும் வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மாநில அரசுக்கு உதவ உறுதியாக உள்ளோம்" என்று ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கை: உத்தரகாசியில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தரகாசி, தெஹ்ரி, ருத்ரபிரயாக், சாமோலி, பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
190 பேர் மீட்பு: உத்தராகண்ட் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமார் 190 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார். உத்தரகாசியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், “தரளி முற்றிலும் பேரழிவின் பிடியில் சிக்கியுள்ளது. நான் அங்கு சென்று அனைத்து மக்களையும் சந்தித்தேன். மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் தொடர்ந்து ஆறு முறை வந்தது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். மண் சகதி மீண்டும் மீண்டும் வந்ததால், அங்குள்ள அனைத்தும் பேரழிவிற்கு உள்ளாயின" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT