Published : 06 Aug 2025 07:18 PM
Last Updated : 06 Aug 2025 07:18 PM
புதுடெல்லி: தமிழக அரசின் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டங்களான ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரையோ அல்லது உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களையோ பயன்படுத்தக் கூடாது என தடை கோரி அதிமுக எம்.பி.யான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசின் திட்டங்களில் உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்றும், அதேபோல அரசின் திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் கட்சியின் கொடி, சின்னம் போன்றவற்றுடன் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் படங்கள், பெயர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி திமுக சார்பில் அனுராதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி.வில்சன் ஆகியோர் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று முறையீடு செய்தனர். அதையேற்ற தலைமை நீதிபதி, இந்த மனுவை இன்று (ஆக.6) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி , முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோர், "தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நடைமுறை தடையாக உள்ளது. 2011 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிமுக ஆட்சியின்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை குறிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு ‘அம்மா’ எனும் பெயர் வைக்கப்பட்டது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் என்பது அரசியல் ஆதாயத்துக்கான விளம்பர வாகனம் அல்ல. மாறாக, மக்களை மையமாகக் கொண்ட ஒரு திட்டம். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கு அரசின் சேவைகள் கிடைப்பதை தடுக்கிறது. இது பொது மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கை விளைவிக்கிறது" என வாதிட்டனர்.
சி.வி.சண்முகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங், பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆகியோர், "திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. திட்டத்தில் ஸ்டாலினின் பெயர் இருப்பதையே எதிர்க்கிறோம். 1968-ம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் உத்தரவின் பத்தி 16ஏ-ன் கீழ் திமுக மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். ஸ்டாலின் என்ற பெயருடன் அரசு விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை விதிக்க, அரசு விளம்பரங்களுக்கான உள்ளடக்க ஒழுங்குமுறைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தினர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "நாட்டின் பல மாநிலங்கள் அரசியல் தலைவர்களின் பெயர்களில் திட்டங்களை செயல்படுத்துகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெயர்களிலும் இபோன்று திட்டங்களுக்கு பெயர்கள் வைக்கப்படும்போது ஒரு அரசியல் தலைவரை மட்டும் தேர்ந்தெடுத்துள்ள மனுதாரரின் செயல் பாராட்டுக்குரியது அல்ல.
அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மனுதாரர் கவலைப்பட்டால், இதுபோன்ற அனைத்து திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு தலைவரை மட்டும் குறிவைப்பது மனுதாரரின் நோக்கங்களைக் காட்டுகிறது" எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் சி.வி. சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT