Published : 06 Aug 2025 08:31 AM
Last Updated : 06 Aug 2025 08:31 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில், யாதவர், முஸ்லிம்களுக்கு எதிரான சுற்றறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் அரசு நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. 57,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் அரசு பொது நிலங்கள் உள்ளன. இவற்றில், கிராம சபை நிலம், குளங்கள், கொட்டகைகள், உரக் குழிகள், தகன மைதானங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைக்காக, பஞ்சாயத்து ராஜ் துறையின் தலைமை அலுவலக இணை இயக்குநர் சார்பில் ஒரு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது. அது அனைத்து 75 மாவட்ட ஆட்சியர்கள், அரசு நில நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதில், யாதவர்கள், முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகார் மனுக்கள் வந்தன.
இதுகுறித்து முதல்வர் யோகி கூறுகையில், ‘பாரபட்சமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிடுகிறேன். இந்த உத்தரவை பிறப்பித்த பஞ்சயத்து ராஜ் துறையின் இணை இயக்குநர் சுரேந்திர நாத் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் சாரத்திற்கு எதிராக, எந்த ஒரு சமூகத்துக்கும் அல்லது மதத்தினருக்கும் எதிராக உத்தரவு பிறப்பிப்பது அரசின் கொள்கைகளுக்கு எதிரானவை.
எதிர்காலத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய அத்தகைய மொழியை எந்த அரசு கடிதப் பரிமாற்றத்திலும் பயன்படுத் தக்கூடாது. அரசின் சார்பாக எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது, அரசியலமைப்பு மதிப்புகள், பாரபட்சமற்ற தன்மை மற்றும் நிர்வாக ஒழுக்கம் ஆகியவற்றை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT