Published : 06 Aug 2025 12:23 AM
Last Updated : 06 Aug 2025 12:23 AM
டேராடூன்: உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உத்தராகண்டில் சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி புனித தலங்கள் அமைந்துள்ளன. கங்கோத்ரி கோயிலுக்கு அருகே 8 கி.மீ. தொலைவில் தரளி என்ற கிராமம் உள்ளது. இமயமலையில் 10,200 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமம் வழியாகவே கங்கோத்ரி கோயிலுக்கு செல்ல முடியும். இதனால் தரளி கிராமத்தில் 25 ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தன. 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் கிராமத்தில் வசித்து வந்தனர்.
கடந்த சில வாரங்களாக உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கங்கோத்ரி பகுதியில் நேற்று பிற்பகலில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. இதில் ஒட்டுமொத்த கிராமமும் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு படை மற்றும் காவல் துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுவரை 5 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. தராலி கிராமத்துக்கு அருகே ஹர்சில் பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அந்த ராணுவ முகாம் மற்றும் அங்குள்ள ஹெலிபேட் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கிறது. அங்கு முகாமிட்டிருந்த 10 ராணுவ வீரர்களை காணவில்லை
பிரதமர் மோடி ஆறுதல்: பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். பாதிப்புக்காக ஆறுதல் தெரிவித்ததுடன், உத்தராகண்ட் அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்தார். இதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உத்தராகண்ட் முதல்வரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தேவையான உதவிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.
பிரதமர் மோடி சமூக வலைதளத் தில் வெளியிட்ட பதிவில், “உத்தரகாசி, தரளி கிராமத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசினேன். மாநில அரசு மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இயற்கை பேரிடரால் தரளி கிராமத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சம்பவ இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி நடைபெறுகிறது. அனைத்து மக்களும் பத்திரமாக மீட்கப்பட பகவானை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் கடும் சிரமம்: வெள்ள பாதிப்பு குறித்து மீட்புப் படை வீரர்கள் கூறியதாவது: மேகவெடிப்பால் கீர் கங்கா நதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, தரளி கிராமம் முழுமையாக அழிந்துள்ளது. சுமார் 43 கி.மீ. வேகத்தில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்திருக்கிறது. இதனால் சில நிமிடங்களில் ஒட்டுமொத்த கிராமமும் அழிந்துவிட்டது. வெள்ளம் வடிந்துள்ள நிலையில், 30 அடி உயரத்துக்கு சகதி தேங்கியுள்ளது.
இந்த சகதியில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இது மிகவும் சவாலான பணியாக உள்ளது. வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் இருந்த இடமே தெரியாமல் சகதி மேடாக மாறியிருக்கிறது. தரளியில் மிகப்பெரிய சந்தை செயல்பட்டு வந்தது. அந்த சந்தை இருந்த இடமே தெரியவில்லை. சுமார் 13.4 ஏக்கர் பரப்பளவில் இருந்த கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன.
தரலி கிராமத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும் சிரமங்களுக்கு நடுவே மீட்புப் பணியை மேற்கொண்டு வருகிறோம். இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு மீட்புப் படை வீரர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT