Published : 05 Aug 2025 07:13 PM
Last Updated : 05 Aug 2025 07:13 PM
புதுடெல்லி: இந்தியா - பிலிப்பைன்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், புதுடெல்லி - மணிலா நேரடி விமானச் சேவை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளது.
5 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்னாண்ட் ஆர் மார்கோஸ் ஜூனியர், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இரு நாடுகளின் உயர்மட்டக் குழுக்களுடனான சந்திப்பும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகள் இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை (கிழக்கு) செயலாளர் பி.குமரன், "பிலிப்பைன்ஸ் உடனான இந்தியாவின் ராஜதந்திர உறவுகள் கடந்த 1949-ம் ஆண்டு தொடங்கியது. இதன் 75-ம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலான பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்திய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியா - பிலிப்பைன்ஸ் உறவை விரிவான கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அரசியல் ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி, டிஜிட்டல் பொருளாதாரம், நிதி தொழில்நுட்பம், கலாச்சாரம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பல்வேறு துறைகளுக்கு இடையே ஈடுபாட்டை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2025 முதல் 2029 வரையிலான காலகட்டத்துக்கான செயல் திட்டத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி, குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைப்பது, ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்பட 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. புதுடெல்லியில் இருந்து மணிலாவுக்கு நேரடி விமான சேவை அக்டோபர் 1 முதல் தொடங்கப்படும். விமான சேவையை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT