Published : 05 Aug 2025 01:15 PM
Last Updated : 05 Aug 2025 01:15 PM
புதுடெல்லி: யார் உண்மையான இந்தியர் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரியங்கா காந்தி இன்று இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 2022 செப்டம்பர் 7-ம் தேதி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’யை தொடங்கிய ராகுல் காந்தி, யாத்திரையின் இடையே 2022, டிசம்பர் 16 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “எல்லையில் 2,000 சதுர கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களை, சீன ராணுவம் கொலை செய்தது. சமீபத்தில் அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவை அனைத்தையும் நாட்டு மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர்.” என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக மத்திய பாதுகாப்புத் துறையின் எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவத்சவா லக்னோவில் உள்ள எம்பி எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
லக்னோ நீதிமன்ற வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘உள்நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், லக்னோ நீதிமன்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரி இருந்தார். இதை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மே 29-ம் தேதி அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து கடந்த ஜூன் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக எந்த அடிப்படையில் கூறினீர்கள்? உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இப்படி சொல்ல மாட்டீர்கள். எல்லையில் மோதல் நடந்து கொண்டிருக்கும்போது இப்படியா சொல்வது?” என கண்டித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான பிரியங்கா காந்தி வத்ரா, “மிகுந்த மரியாதையுடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குச் சொல்கிறேன், உண்யைான இந்தியர் யார் என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியாது.
கேள்வி கேட்பதும், சவால் விடுப்பதும் எதிர்க்கட்சித் தலைவரின் கடமை. எனது சகோதரர், ராணுவத்துக்கு எதிராக ஒருபோதும் எந்த கருத்தையும் சொல்ல மாட்டார். அவர் ராணுவத்தை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். அவரது கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT