Published : 05 Aug 2025 11:28 AM
Last Updated : 05 Aug 2025 11:28 AM
மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குடும்பத்தினரின் சம்மதம் இல்லாத காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம சபையில் ஊர் மக்கள் ஒன்றுகூடி தீர்மானம் போட்டு, அதை நிறைவேற்றி உள்ளனர். இது இப்போது சர்ச்சையாகி உள்ளது.
சண்டிகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மனக்பூர் ஷெரீஃப் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் கடந்த மாதம் 31-ம் தேதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கிராம பஞ்சாயத்து நிர்வாகிளில் ஒருவரான தல்வீர் சிங் கூறியதாவது:
“இது தண்டனை அல்ல. எங்களது பாரம்பரிய மரபு மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை இது. நாங்கள் காதல் திருமணம் அல்லது சட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அதை எங்கள் பஞ்சாயத்தில் நாங்கள் அனுமதிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
தங்கள் கிராமம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தான் இந்த தடை பொருந்தும் என மனக்பூர் ஷெரீஃப் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு கிராம மக்கள் அடைக்கலம் கொடுத்தால், அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அண்மையில் அந்த கிராமத்தை சேர்ந்த 26 வயதான தாவீந்தரும், 24 வயதான பேபியும் காதல் திருமணம் செய்து கொண்டது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
“வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரம் சட்டப்பூர்வமான திருமண வயதை எட்டிய ஒவ்வொருக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை பாதுகாக்க வேண்டும். இந்த தீர்மானம் ஏதோ தலிபானின் கட்டளை போல உள்ளது” என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாட்டியாலா தொகுதியின் எம்.பி தரம்வீரா காந்தி கூறியுள்ளார்.
இருப்பினும் கிராமத்தில் நிறைவேற்றப்பட்ட குடும்பத்தினரின் சம்மதம் இல்லாத காதல் திருமண தடை தீர்மானத்துக்கு பெரும்பாலான கிராம மக்கள், இளைஞர்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. மேலும், தங்கள் வழியை மற்ற கிராமங்களும் பின்பற்ற வேண்டும் என மனக்பூர் ஷெரீஃப் கிராமத்தினர் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT