Published : 05 Aug 2025 10:40 AM
Last Updated : 05 Aug 2025 10:40 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவர் தனது பெயரை மாற்றி கோயில் பூசாரியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அவரை போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு உ.பி.யின் ஷாம்லி நகருக்கு அருகில் உள்ள மந்தி ஹசன்பூர் கிராமத்தில் சனி பகவான் கோயில் உள்ளது. இங்கு பாபா பெங்காலி எனும் பாலக்நாத் (55) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பூசாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாலக்நாத் இந்து அல்ல. மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் என்று அப்பகுதி காவல் நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் பாலக்நாத் மேற்கு வங்கத்தை சேர்ந்த இமாமுத்தீன் அன்சாரி எனத் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 ஆதார் அட்டைகள் மற்றும் ஒரு பான் கார்டு கைப்பற்றப்பட்டது. இதில் ஒரு ஆதார் அட்டையில், உ.பி.யின் சகரான்பூரை சேர்ந்த கமல்நாத் என இருந்தது. மற்ற 2 அட்டைகளிலும் இமாமுத்தீன் அன்சாரி என்ற பெயருடன் மேற்கு வங்க முகவரிகள் இருந்தன.
இதையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இமாமுத்தீனை போலீஸார் கைது செய்தனர். கைரானா நீதிமன்றம் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இமாமுத்தீன் குற்றப் பின்னணி கொண்டவரா என விசாரிக்க மேற்கு வங்க முகவரிக்கு போலீஸ் குழு சென்றுள்ளது. விசாரணையில் வெளிப்படும் உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் விஷ்வ இந்து பரிஷத்தின் ஷாம்லி மாவட்ட சேவைத் தலைவர் வின்னி ராணா கூறுகையில், "கடந்த மாதம் மீரட் கோயில் ஒன்றில் இதுபோல் அடையாளத்தை மாற்றி பூசாரியாக இருந்த முஸ்லிம் சிக்கினார். எனவே இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம்.
சனாதனத்திற்கு எதிரான எந்தவொரு சதியும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது. இவர்கள், உ.பி. கிராமப்புறங்களிலும் துறவிகள் போர்வையில் யாசகம் ஏந்துபவர்களாகி உளவு பார்க்கிறார்கள். இவர்களது அடையாளங்களை எங்கள் அமைப்பினர் சரிபார்த்து குற்றவாளிகளை காவல் துறையிடம் ஒப்படைப்பார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT