Published : 05 Aug 2025 08:12 AM
Last Updated : 05 Aug 2025 08:12 AM
அமராவதி: ‘ஸ்ரீ சக்தி’ எனும் பெயரில் வரும் 15-ம் தேதி முதல் ஆந்திர மாநில அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் அமலாகவுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம். ராம் பிரசாத் ரெட்டி தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்போகும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எம். ராம் பிரசாத் ரெட்டி கூறியதாவது: சுதந்திர தினமான வரும் 15-ம் தேதி முதல், தேர்தலில் கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது. இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘ஸ்ரீ சக்தி’ என பெயரிட்டுள்ளார்.
இந்த ஸ்ரீ சக்தி திட்டத்துக்காக 6,700 அரசு பேருந்துகள் உபயோகப்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தை நமது மாநிலத்தில் அமல்படுத்த, ஏற்கெனவே இத்திட்டம் அமலில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு குழு சென்று ஆய்வு நடத்தியது.
ஆந்திர மாநிலத்தில் கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள், மாநகரங்கள் வரை என அனைத்து இடங்களுக்கும் ‘ஜீரோ டிக்கெட்’ முறையில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
பல்லெ வெலுகு, அல்ட்ரா பல்ல வெலுகு, எக்ஸ்பிரஸ், அல்ட்ரா எக்ஸ்பிரஸ் என அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் என ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம்.
இத்திட்டத்துக்காக அரசு ரூ.1,950 கோடி செலவிடுகிறது. விரைவில் 3,000 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து கூடுதலாக 1,400 மின்சாரப் பேருந்துகளும் வாங்கப்படும். இவ்வாறு அமைச்சர் எம். ராம்பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT