Published : 05 Aug 2025 07:45 AM
Last Updated : 05 Aug 2025 07:45 AM

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவு - தலைவர்கள் அஞ்சலி

டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் நேற்று காலமானார். இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். உடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் உள்ளனர். | படம்: பிடிஐ |

ராஞ்சி: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் (81) நேற்று காலமானார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டிருந்த சிபு சோரன், மக்களவை எம்.பி.யாக 8 முறை பணியாற்றினார்.

மேலும், மாநிலங்களவை உறுப்பினராக 2 முறை பதவி வகித்தவர். தற்போது 2-வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இதனிடையே உடல்நலக் குறைவால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிபு சோரன் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.

பிஹார் மாநிலத்தின் ராம்கார் மாவட்டத்தில் பிறந்தவர் சிபு சோரன். 1972-ம் ஆண்டு இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் ஏ.கே. ராய், குர்மி மஹதோ தலைவர் பினோத் பிஹாரி மஹதோ ஆகியோருடன் இணைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியை சோரன் உருவாக்கினார். தொடர்ந்து 2000-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் என்ற தனி மாநிலம் உருவாக வழிவகுத்த மாநில இயக்கத்தின் முக்கிய முகமாக சிபு சோரன் மாறினார்.

சிபு சோரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வரும் நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நேற்று நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி: இந்நிலையில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சிபு சோரன் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அவரது மகன் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபு சோரனின் சொந்த ஊரில் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x