Published : 05 Aug 2025 07:39 AM
Last Updated : 05 Aug 2025 07:39 AM
புர்ஹான்பூர்: மத்திய பிரதேச மாநிலம் நவாரா பகுதியில் நேபா நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்தவர் பாக்யஸ்ரீ நம்தே தனுக் (35). இவரை முஸ்லிமாக மதம் மாறி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஷேக் ரயீஸ் (42) என்பவர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாக்யஸ்ரீ வீட்டில் இருந்தபோது ஷேக் ரயீஸ் நேற்றுமுன்தினம் இரவு திடீரென உள்ளே நுழைந்தார். பின்னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தார். அத்துடன் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சில மணி நேரங்களில் ஷேக் ரயீஸை கைது செய்தனர்.
இதுகுறித்து புர்ஹான்பூர் போலீஸ் கூடுதல் எஸ்பி அன்தர் சிங் கனேஷ் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்ட ஷேக் ரயீஸ் மீது கொலை, சித்ரவதை உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.
இதுகுறித்து பாக்யஸ்ரீ சகோதரி சுபத்ரா பாய் கூறும்போது, ‘‘என் சகோதரி பாக்யஸ்ரீயின் தலைமுடியை இழுத்து சென்று ஷேக்ரயீஸ் அடித்து உதைத்தார். மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தினார். அத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே சித்ரவதை செய்து வந்தார். அதற்கு பாக்யஸ்ரீ ஒப்புக் கொள்ளவில்லை’’ என்றாா்.
இந்நிலையில், பாக்யஸ்ரீக்கு நியாயம் கிடைக்க வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்துக்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு தலைமை வகித்த அமித் வருடே கூறும்போது, ‘‘இது லவ் ஜிகாத் சம்பவம். கடந்த 4 நாட்களுக்கு முன்பே ஷேக் ரயீஸ் சித்ரவதை குறித்து பாக்யஸ்ரீ போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஷேக் ரயீஸை போலீஸார் விடுவித்துள்ளனர். எனவே, அலட்சியமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளி ஷேக்கைதூக்கிலிட வேண்டும்’’ என்று கூறினார்.
ம.பி. முன்னாள் கேபினட் அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், அலட்சியமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கிடையில், ஷேக் ரயீஸ் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமித்துள்ள இடங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT