Published : 04 Aug 2025 05:20 PM
Last Updated : 04 Aug 2025 05:20 PM
புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ஐரோப்பா செல்ல பல்வேறு நிபந்தனைகளுடன் டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா மோசடிகள் தொடர்பான வழக்குகளில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எம்.பி கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டெல்லியின் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி திக் வினய், எம்.பி கார்த்தி சிதம்பரம் இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பாவுக்கு பயணம் செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தார். அதன்படி, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் எந்த வங்கிக் கணக்கையும் திறக்கவோ, மூடவோ கூடாது, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எந்த வகையான சொத்து பரிவர்த்தனைகளிலும் ஈடுபடவோ கூடாது, ஆதாரங்களை சிதைக்கவோ அல்லது வழக்குகளின் சாட்சிகளை எந்த வகையிலும் பாதிக்கவோ கூடாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எஃப்டிஆர் எனப்படும் ரூ.1 கோடிக்கான நிலையான வைப்பு ரசீது குற்றம்சாட்டப்பட்ட கார்த்தியால் ஏற்கெனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பாதுகாப்பு வைப்புத் தொகையாக பதிவில் வைக்கப்படுகிறது. இதனிடையே, வழக்கு தொடர்பாக பேசிய டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி திக் வினய் சிங் கூறுகையில், ”அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை மற்றும் சுதந்திர உரிமையின் ஒரு முக்கிய அம்சமாகும். பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளுக்குச் செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த சுதந்திரத்தை எந்த வகையிலும் கார்த்தி சிதம்பரம் தவறாகப் பயன்படுத்தியதற்கான எந்த தகவலும் இல்லை. வெளிநாடுகளுக்குச் செல்லும் உரிமை, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்க்கை உரிமை மற்றும் சுதந்திரத்தின் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. மேலும், அனைத்து உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, விண்ணப்பதாரர் ஏன் அந்த உரிமையை இழக்க வேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. வழக்குகளின் விரிவான உண்மைகளை தற்போதைய உத்தரவின் மீது சுமத்த வேண்டிய அவசியமில்லை, அது தேவையற்றது," என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
2011-ம் ஆண்டு, கார்த்தி சிதம்பரமத்தின் தந்தை ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, சீன நாட்டினருக்கு 263 விசா வழங்கப்பட்டது. இதில், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய அமலாக்கத் துறை பண மோசடி வழக்கைப் பதிவு செய்தது. அதே வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளில் ஒரு வழக்கு பதிவாகி உள்ளது. இது காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது 2006-ல் ஒப்புதல் வழங்கப்பட்டதாகப் புகாரானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT