Published : 04 Aug 2025 12:56 PM
Last Updated : 04 Aug 2025 12:56 PM
புதுடெல்லி: டெல்லி தமிழ்நாடு இல்லம் அருகே இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை எம்.பி சுதாவிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருவதால், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியான ஆர்.சுதா டெல்லி சாணக்யபுரியின் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, போலந்து தூதரகம் அருகே நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் சுதா காயமடைந்தார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சுதா எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், “இன்று காலை 6:15 மணியளவில் போலந்து தூதரகம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டபோது, ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டியில் வந்த ஒருவர் எனது தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். சங்கிலியை இழுத்தபோது என் கழுத்தில் காயம் ஏற்பட்டது. எனது சுடிதாரும் தாக்குதலின்போது கிழிந்தது.
சாணக்யபுரி போன்ற உயர் பாதுகாப்பு மண்டலத்தில், மக்களவை உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த அப்பட்டமான தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் தேசிய தலைநகரில் உள்ள இந்த உயர் பாதுகாப்பு மண்டலத்தில்கூட ஒரு பெண் பாதுகாப்பாக நடக்க முடியாவிட்டால், வேறு எங்கு நாம் பாதுகாப்பாக உணர முடியும்?
என் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது, நான்கு பவுனுக்கும் அதிகமான எடையுள்ள தங்கச் சங்கிலியை இழந்துவிட்டேன். இந்த குற்றச் சம்பவத்தால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்" என்று அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT