Published : 04 Aug 2025 07:05 AM
Last Updated : 04 Aug 2025 07:05 AM
புதுடெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர் தாஹிர் ஹபீப். இவர் ஜம்மு-காஷ்மீரில் நடந்த மகாதேவ் ஆபரேஷனில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது இறுதிச் சடங்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அவரது கிராமத்தில் நடைபெற்றது.
இதுதொடர்பாக டெலிகிராம் சேனல்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில் முன்னாள் பாகிஸ்தான் ராணுவ வீரரும், லஷ்கர்-இ-தொய்பா செயல்பாட்டாளருமான தாஹிர் ஹபீப்பின் இறுதிச் சடங்கில் ராவல்கோட்டில் உள்ள கை காலா கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் கூடியிருந்தனர்.
உள்ளூர் லஷ்கர்-இ-தொய்பா தளபதி ரிஸ்வான் ஹனிப் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முயன்றபோது அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதிலிருந்து பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கின்போது, லஷ்கர் இயக்கத்தினர் துக்கத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் மிரட்டினர், ஆனால், கிராம மக்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT