Published : 03 Aug 2025 08:23 AM
Last Updated : 03 Aug 2025 08:23 AM
புதுடெல்லி: மாலேகான் வெடிகுண்டு வழக்கில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி பெயர்களைக் கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் என்று பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், அஜய் ரகிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குர்கர்னி ஆகிய 7 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கை 2011-ம் ஆண்டு முதல் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து 3 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதில், பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் உள்பட 7 பேரையும் விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து பிரக்யா தாக்குர் நேற்று கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பாக என்னிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது பலரின் பெயர்களை இதில் சேர்க்குமாறு வற்புறுத்தினர், சித்ரவதை செய்தனர். பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோரின் பெயர்களைக் கூறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டேன்.
என்னிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளின் நோக்கம், என்னை சித்ரவதை செய்வதாக இருந்தது. நீ இந்தப் பெயர்களை கூறிவிட்டால் நாங்கள் உன்னை சித்ரவதை செய்யமாட்டோம். உன்னை விட்டுவிடுவோம் என்று தெரிவித்தனர்.
அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது என்னுடைய நுரையீரல் சவ்வு கிழிந்தது. நான் மயக்கமடைந்து விட்டேன். பின்னர் என்னை மருத்துவமனையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பல உண்மைக் கதைகளை நான் வெளியே சொல்வேன். உண்மை வெளியே வரும். இவ்வாறு பிரக்யா சிங் தாக்குர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT