Last Updated : 02 Aug, 2025 03:02 PM

5  

Published : 02 Aug 2025 03:02 PM
Last Updated : 02 Aug 2025 03:02 PM

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை: தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கடந்த ஒரு மாதமாக தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வந்தது. இந்​நிலை​யில், பிஹார் வரைவு வாக்​காளர் பட்​டியலை தலைமை தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளியிட்டது.

பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் செய்​வதற்கு முன்​னர், கடந்த ஜூன் மாதம் 7.93 கோடி வாக்​காளர்​கள் இருந்​தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 7.23 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ன.

இறந்தவர்கள், நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு அல்லது நாட்டுக்கு இடம் பெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இருமுறை பதிவானவர்கள் ஆகியோரின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதேநேரத்தில், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் செப்​டம்​பர் 1-ம் தேதி வரை ஆட்​சேபனை​கள் தெரி​வித்து பெயர்களை இணைத்துக் கொள்ளலாம் என்று தேர்​தல் ஆணை​யம் அவகாசம் அளித்​துள்​ளது.

அதேநேரத்தில், இந்த சிறப்பு தீவிர திருத்தம் என்பதே முறைகேடுகள் நிறைந்தது என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. சிறப்பு தீவிர திருத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று அக்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிஹாரின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

திகா சட்டமன்றத் தொகுதி வாக்காளரான தேஜஸ்வி யாதவ், ராகோபூர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்கள் முன்னிலையில் தனது பெயரை சரிபார்த்து, வரைவுப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததை சுட்டிக்காட்டினார்.

இது ஜனநாயகப் படுகொலை என்றும் வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு பிரிவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய தேஜஸ்வி யாதவ், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாத நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் எவ்வாறு போட்டியிட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x