Published : 02 Aug 2025 01:57 PM
Last Updated : 02 Aug 2025 01:57 PM
அகமதாபாத்: பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள் எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அகமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு அகமதாபாத் போக்குவரத்துப் போலீஸ் நிதி உதவி அளித்துள்ள நிலையில், தங்கள் அனுமதியின்றி இவை ஒட்டப்பட்டுவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
'பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்', 'நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள் - அங்கு நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கோ அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கோ உள்ளாகலாம்', 'ஆண்கள் தங்கள் தோழியுடன் இருட்டான பகுதிக்கோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கோ செல்ல வேண்டாம் - அங்கு அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக நேரலாம்' போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அகமதாபாத் நகரின் சோலா, சந்தேலோடியா பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. பின்னர், இந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
இது குறித்து விளக்கம் அளித்த அகமதாபாத் மாநகர போக்குவரத்து துணை காவல் ஆணையர் நீதா தேசாய், “இந்த போஸ்டர்களை ஒட்டியது சதார்க்தா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்த நிறுவனம் எங்களை அணுகி, பள்ளி, கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தாங்கள் நடத்த உள்ளதாகத் தெரிவித்தனர். அவர்களின் நிகழ்ச்சிகளில் போக்குவரத்துப் போலீசாரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டிகள் எங்களுக்கு காண்பிக்கப்பட்டன. ஆனால், இதுபோன்ற சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் எங்களுக்கு காண்பிக்கப்படவில்லை. நாங்கள் சாலைப் பாதுகாப்பு தொடர்பான சுவரொட்டிகளுக்காகவே அனுமதி வழங்கினாம். பெண்கள் பாதுகாப்பு குறித்து அல்ல. எங்கள் அனுமதி இன்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட உடன் போஸ்டர்கள் அகற்றப்பட்டன” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த சுவரொட்டிகள் குஜராத்தின் நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளன. குஜராத்தில் பெண்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதா வேண்டாமா என்பதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT