Published : 02 Aug 2025 12:59 PM
Last Updated : 02 Aug 2025 12:59 PM
புதுடெல்லி: கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் சட்ட மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, “மக்களவைத் தேர்தலில் மோசடி செய்ய முடியும். 2024 மக்களவைத் தேர்தலிலும் மோசடி நடந்துள்ளது. இதை நிரூபிக்க தரவுகளும் ஆவணங்களும் இப்போது உள்ளன. இதை நாங்கள் நிரூபிக்கப் போகிறோம்.
ஒரு மக்களவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தபோது, மொத்தமுள்ள 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த மோசடியால்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் 15-20 தொகுதிகள் குறைவாகப் பெற்றிருந்தால், அவர் (பிரதமர் நரேந்திர மோடி) பிரதமராகி இருக்க மாட்டார்.
இந்தியாவில் தேர்தல் ஆணையம் இறந்துவிட்டது. சமீப காலமாக தேர்தல் முறை பற்றி நான் பேசி வருகிறேன். 2014 முதல் ஏதோ தவறு இருப்பதாக எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி எனக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு (மக்களவையில்) ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், இதுகுறித்து நாங்கள் பேசும்போதெல்லாம், ஆதாரம் எங்கே என்று மக்கள் கேட்டார்கள்.
அப்போதுதான், மகாராஷ்டிராவில் சில விஷயங்கள் நடந்தன. மக்களவைத் தேர்தலில் நாம் அங்கு வெற்றி பெற்றோம். 4 மாதத்துக்குப் பிறகு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தோற்கவில்லை; மாறாக அழிக்கப்பட்டோம். எனவே, தேர்தல் முறைகேடுகளை நாங்கள் தீவிரமாகத் தேடத் தொடங்கினோம்.
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையே 1 கோடி புதிய வாக்காளர்கள் வந்திருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அந்த வாக்குகளில் பெரும்பகுதி பாஜகவுக்குச் சென்றுள்ளது. இதற்கான ஆதாரம் இப்போது எங்களிடம் உள்ளது. சந்தேகத்துக்கு இடமின்றி இதைக் கூறுகிறேன்" என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் மறுப்பு: தேர்தல் மோசடி குறித்த ராகுல் காந்தியின் கருத்தை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் கூறப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தேர்தல் ஆணையம் புறக்கணிக்கிறது. இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் என்று நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பணிபுரியும் அனைத்து தேர்தல் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT