Published : 02 Aug 2025 09:47 AM
Last Updated : 02 Aug 2025 09:47 AM
புதுடெல்லி: சுற்றுலா விசா மூலம் ஜம்முவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்ப உள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த ரக்ஷந்தா ரஷீத். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தனது முடிவினை தெரிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது.
இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களும் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் உள்ள வாகா - அட்டாரி சோதனைச் சாவடி வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். வாடிய முகத்துடன் தங்களது குடும்பம், கணவர், பிள்ளைகளிடம் இருந்து விடைபெற்று சென்றனர்.
அவர்களில் ஒருவர்தான் ரக்ஷந்தா ரஷீத். 62 வயதான அவர், கடந்த 38 ஆண்டுகளாக ஜம்முவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இல்லத்தரசியாக குடும்பத்தை கவனித்து வந்த அவர், பஹல்காம் தாக்குதலை அடுத்து நாடு கடத்தப்பட்டார். இந்தியாவில் நீண்ட கால விசாவில் அவர் தங்கியிருந்தார். கடந்த 1996-ல் இந்திய குடியுரிமை வேண்டி அவர் விண்ணப்பித்தார். அவரது கோரிக்கை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் நாடு கடத்தப்பட்ட போது நீண்ட கால விசாவை புதுப்பிக்க மனு செய்திருந்தார். அது பரிசீலனையில் இருந்தபோது இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார். கடந்த மே மாதம் அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். ஜூன் 6-ம் தேதி அன்று இந்த வழக்கில் ரக்ஷந்தா ரஷீதை 10 நாட்களில் இந்தியா வர அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை நீதிபதிகள் வலியுறுத்தினர். அதை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. தேசத்தின் நலன் கருதி வெளிநாட்டினரை வெளியேற்றும் அரசின் முடிவு இது என அப்போது தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், ரக்ஷந்தா ரஷீதுக்கு சுற்றுலா விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஜூலை 30-ம் தேதி அன்று உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் (SG) துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். “இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதம் மற்றும் விவாதங்களுக்கு பிறகும், வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டும் பிரதிவாதிக்கு சுற்றுலா விசா வழங்க முடிவு அரசு செய்துள்ளது” என தெரிவித்தார். மேலும், பிரதிவாதி தரப்பில் நீண்ட கால விசா மற்றும் இந்திய குடியுரிமை தொடர்பாக உள்துறையை அணுகலாம் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு திரும்ப பெறப்பட உள்ளதாகவும், இந்த வழக்கு தீர்வு வேண்டி தொடுக்கப்பட்டது என்றும், விளம்பர நோக்கத்துக்கானது அல்ல என்றும் ரக்ஷந்தா ரஷீதின் வழக்கறிஞர் அங்கூர் சர்மா கூறினார்.
கடந்த மூன்று மாத காலங்களாக ரக்ஷந்தா ரஷீத், பாகிஸ்தானில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி உள்ளதாகவும். அவருக்கு பாகிஸ்தானில் உறவினர்கள் யாரும் இல்லை என்றும் அவரின் மகள் பாத்திமா ஷேக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT