Published : 02 Aug 2025 08:22 AM
Last Updated : 02 Aug 2025 08:22 AM
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கடந்த ஒரு மாதமாக தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வந்தது. இந்த நடவடிக்கையின் போது பிஹாரில் இறந்து போனவர்கள், நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள் என ஆயிரக்கணக்கானோரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த ஜூலை 25-ம் தேதி தேர்தல் ஆணையம் கூறுகையில், “பிஹாரில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை. அவர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்திருக்கலாம்” என்று தெரிவித்தனர். இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு முன்னர், கடந்த ஜூன் மாதம் 7.93 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை குறித்து இதில் தகவல் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் இந்தப் பட்டிலில் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம். பெயர்கள் விடுபட்டிருந்தால் பெயர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கலாம். மேலும், இந்தப் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே ஆணையம் அறிவித்துள்ளது. பட்டியலில் திருத்தம் இருந்தால், அது தொடர்பாக அவர்கள் கோரிக்கை விடுக்கலாம். செப்டம்பர் 1-ம் தேதி வரை ஆட்சேபனைகள் தெரிவித்து சரி செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் ஒரு மாதம் அவகாசம் அளித்துள்ளது.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT