Published : 01 Aug 2025 07:09 PM
Last Updated : 01 Aug 2025 07:09 PM
பெங்களூரு: வேகமாக வளர்ந்து வரும் உலகின் 5-வது பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரத்தை மடிந்துவிட்டது என்று டொனால்டு ட்ரம்ப் கூறுகிறார் என்றால், ஒன்று அவர் பார்வையற்றவராக இருக்க வேண்டும் அல்லது தகவல் அறியாதவராக இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய பொருளாதாரம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதாரமற்ற, ஆத்திரமான கருத்துகளை அறிந்தபோது மற்ற அனைவரையும் போலவே நானும் ஆச்சரியப்பட்டேன். அவரைப் போன்ற உறுதியற்ற, நாகரிகமற்ற, பொறுப்பற்ற ஒரு நாட்டின் தலைவரை நவீன வரலாறு கண்டதில்லை என்று நினைக்கிறேன்.
ட்ரம்ப் இந்தியாவுடன் மட்டும் மோசமாக நடந்து கொள்ளவில்லை, அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகளையும் விட்டுவைக்காதவர் அவர். அடிப்படையிலேயே அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. ராஜதந்திரம் அல்லது அரசுத் திறன் மூலம் அதைக் கண்டறிந்து தீர்க்க முடியாது. அவரது ஆத்திர குணம் குறித்து இதற்கு மேலும் சொல்வது சரியாக இருக்காது. ஏனெனில், அது நமது சொந்த தரத்தை குறைத்துவிடும். இந்தியாவில் உள்ள ஒரு சிறு வணிகரோ அல்லது ஏழை விவசாயியோ கூட, தனது தொழிலை மிகுந்த கண்ணியத்துடனும் நேர்மையுடனும் நடத்துகிறார். அவர்களிடம் இருந்து ட்ரம்ப் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
இந்தியா பன்முகத்தன்மையும் ஜனநாயகமும் கொண்ட இறையாண்மை மிக்க தேசம். சுதந்திரம் பெற்றதில் இருந்தே அது எப்போதும் நாட்டின் உயர்ந்த நலன்களுக்காகவே பாடுபட்டு வருகிறது. தான் எதிர்கொள்ளும் அனைத்து சிரமங்களையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வலுவுடன் முன்னேறுவதற்கான ஆற்றலை கடவுள் அதற்குக் கொடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு கட்டுப்படாது, கட்டளைக்கு கீழ்படியாது என்பதை இந்தியா காட்டியுள்ளது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆதாரமாக உள்ள விவசாயத் துறையையும், சிறு, குறு, நடுத்தர வணிகங்களையும் பாதுகாக்க மோடி அரசாங்கம் முழு முயற்சியை எடுத்துள்ளது. மோடி அரசு எடுத்துள்ள உறுதியான நிலைப்பாடு, முன்னெப்போதும் இல்லாத அளவிலான தேசிய மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும், உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாகவும் உள்ளது. நமது பொருளாதாரத்தை மடிந்துவிட்டது என்று குறிப்பிடுவதற்கு ட்ரம்ப் பார்வையற்றவராகவோ அல்லது தகவல் அறியாதவராகவோ தான் இருக்க வேண்டும்.
ட்ரம்ப்பின் பேட்டியை ரசித்து அவரது செய்தித் தொடர்பாளர்களைப் போல மாறத் துடிக்கும் சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. உங்களின் விரக்தியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நீங்கள் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது. இல்லாவிட்டால், ட்ரம்ப்புடன் சேர்ந்து வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சேர வேண்டியது இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT