Last Updated : 01 Aug, 2025 05:51 PM

2  

Published : 01 Aug 2025 05:51 PM
Last Updated : 01 Aug 2025 05:51 PM

அமெரிக்க உறவு முதல் நிமிஷா பிரியா வழக்கு நிலை வரை: இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான உறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், இந்த உறவு தொடர்ந்து வலுவடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரந்திர் ஜெய்ஸ்வாலின் வாரந்திர செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால், "அந்த தடைகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். அது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என கூறினார்.

இந்தியா ஒருநாள் பாகிஸ்தானிடம் இருந்து எரிபொருள் வாங்கும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்து குறித்த கேள்விக்கு, "இது தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை" என தெரிவித்தார்.

சில இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் (எரிபொருள்) வாங்குவதை நிறுத்திவிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்த கேள்விக்கு, "இந்தியாவின் எரிபொருள் தேவையைக் கருத்தில் கொண்டு நமது நாடு பரந்த அணுகுமுறையை கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். சந்தையில் என்ன கிடைக்கிறது, உலகலாவிய சூழல் எப்படி இருக்கிறது என்பதை நாங்கள் கவனிக்கிறோம். வேறு குறிப்பிட்ட விஷயங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது" என கூறினார்.

ஏமனில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இந்தியர் நிமிஷா பிரியாவின் வழக்கு குறித்த கேள்விக்கு, "இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். இந்த வழக்கில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. எங்களின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

மேலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக சில நட்பு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். இந்த வழக்கு தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள் உண்மையல்ல. எங்களிடம் இருந்து தகவல் வரும் வரை தயவு செய்து பொறுத்திருங்கள். தவறான தகவல்களில் இருந்து விலகி இருக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்" என கூறினார்.

மேலும் அவர், "இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு வலுவாக உள்ளது. பகிரப்பட்ட நலன்கள், ஜனநாயக விழுமியங்கள், வலுவான மக்கள் தொடர்பு என இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது வலுவானது. இந்த கூட்டாண்மை பல மாற்றங்கள் மற்றும் சவால்களைக் கடந்து வந்துள்ளது. இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ள நிகழ்ச்சி நிரல்கள் மீது எங்கள் கவனம் உள்ளது. இந்த உறவு தொடர்ந்து முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எந்த ஒரு நாட்டுடனும் இந்தியா கொண்டுள்ள உறவு என்பது அவற்றின் தகுதியின் அடிப்படையில்தான் நிற்கிறது. இதை மூன்றாவது நாட்டின் பார்வையில் இருந்து பார்க்கக்கூடாது. இந்தியா - ரஷ்யா உறவை பொறுத்தவரை, அது காலத்தால் சோதிக்கப்பட்ட நிலையான கூட்டாண்மையாகும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x