Last Updated : 01 Aug, 2025 01:01 PM

2  

Published : 01 Aug 2025 01:01 PM
Last Updated : 01 Aug 2025 01:01 PM

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரை கைது செய்ய அழுத்தம்: முன்னாள் அதிகாரி தகவல்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப் படம்

புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி மேலதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் எனினும், தான் மறுத்துவிட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு முன்னாள் விசாரணை அதிகாரி மெஹபூப் முஜாவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவு எப்படி விசாரித்தது, ஏன் அவ்வாறு விசாரித்தது என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம் கல்சங்கரா, சந்தீப் டாங்கே, திலீப் படிதார் போன்றவர்கள் தொடர்பாக எனக்கு சில ரகசிய உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றத்தக்கவை அல்ல.

மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி எனக்கு அழுத்தம் தரப்பட்டது. மூத்த அதிகாரிகள் அதற்கான அழுத்தத்தை தந்தனர். அவரைப் போன்ற ஓர் ஆளுமையை கைது செய்வது எனது திறனுக்கு அப்பாற்பட்டது. உத்தரவுகளை நான் பின்பற்றாததால் என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. இது எனது 40 ஆண்டு கால வாழ்க்கையை நாசமாக்கியது. இந்த வழக்கில் காவி பயங்கரவாதம் என்று எதுவும் இல்லை. எல்லாமே போலியானது” என தெரிவித்துள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் உட்பட 7 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், மெஹபூப் முஜாவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு: மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகான் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். 101 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு (ஏடிஎஸ்) பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். பைக்கில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுவெடித்து சிதறியது தெரியவந்தது. அந்த பைக்கின் பதிவெண் போலி என்றும் தெரிந்தது. அதன் இன்ஜின் எண், சேசிஸ் எண் ஆகியவை அழிக்கப்பட்டிருந்தன.

பின்னர், தடயவியல் சோதனை மூலம் இன்ஜின் எண், சேசிஸ் எண் கண்டுபிடிக்கப்பட்டது. அது, பெண் துறவி பிரக்யா சிங் தாக்குருக்கு சொந்தமான பைக் என்று தெரியவந்தது. 2008 அக்டோபர் 23-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, வழக்கின் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டார்.

பிறகு, இந்த வழக்கில் ராணுவ மூத்த அதிகாரி லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித் கைது செய்யப்பட்டார். முன்னாள் ராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், பொருளாளர் அஜய் ரஹிர்கர், ராணுவ உளவுப் பிரிவு அதிகாரி சுதாகர் சதுர்வேதி, சுதாகர் திவேதி, சமீர் குல்கர்னி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2011-ம் ஆண்டு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) வழக்கு மாற்றப்பட்டது. மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அடுத்தடுத்து 4 நீதிபதிகள் விசாரித்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு என்ஐஏ சார்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பிறகு மேலும் 2 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 5-வது நீதிபதியாக ஏ.கே.லகோட்டி வழக்கை விசாரித்தார்.

வழக்கு விசாரணை சுமார் 17 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. அதேநேரம், சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் குற்றவாளியாக அறிவிக்க முடியாது. சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு (யுஏபிஏ - ‘உபா’) சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது தவறானது.

‘மாலேகான் குண்டுவெடிப்புக்கு பைக் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பிரக்யா தாக்குருக்கு சொந்தமானது’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், பைக் அவருக்கு சொந்தமானது என்பது நிரூபிக்கப்படவில்லை. அதேபோல, ‘அந்த பைக்கில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ராணுவ மூத்த அதிகாரி பிரசாத் புரோஹித் தனது வீட்டில் குண்டுகளை பதுக்கி வைத்திருந்தார், அவரே வெடிகுண்டுகளை தயாரித்தார். அபினவ் பாரத் அமைப்பின் பெயரில் நிதி திரட்டப்பட்டு, மாலேகான் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது’ என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவற்றை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

எனவே, குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்குர், பிரசாத் புரோஹித், ரமேஷ் உபாத்யாய், அஜய் ரஹிர்கர், சுதாகர் சதுர்வேதி, சுதாகர் திவேதி, சமீர் குல்கர்னி ஆகிய 7 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். மாலேகான் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x